மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. சுப்ரீம் கோர்ட் அதிரடி..

Supreme Court hits fast forward for Fadnavis, trust vote tomorrow

by எஸ். எம். கணபதி, Nov 26, 2019, 13:53 PM IST

மகாராஷ்டிராவில் பட்நாவிஸ் அரசு நாளை(நவ.27) நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு கூறியுள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றிருந்தது. ஆனால், 56 எம்.எல்.ஏ.க்களை வென்றிருந்த சிவசேனா கட்சி, முதல்வர் பதவியை கேட்டது. தேர்தல் உடன்பாட்டின் போதே இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு தருவதாக பாஜக ஒப்புக் கொண்டிருந்ததாகவும் கூறியது.

ஆனால், இதை பாஜக மறுத்தது. 105 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ்தான் முதல்வர் என்று அறிவித்தது. இதை சிவசேனா ஏற்காததால் கூட்டணி முறிந்தது. இதன்பின், தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி), காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க சிவசேனா முயன்றது. மூன்று கட்சிகளும் 10 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி இறுதியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்பார் என்று முடிவு செய்தன. இதை கடந்த 22ம் தேதி மாலையில் என்.சி.பி. தலைவர் சரத்பவார் அறிவித்தார்.

ஆனால், மறுநாள் 23ம் தேதி அதிகாலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. சரத்பவாரின் அண்ணன் ஆனந்தராவ் பவாரின் மகனும், என்.சி.பி. கட்சியின் சட்டசபைக் கட்சித் தலைவருமான அஜித்பவார், திடீரென பாஜக பக்கம் தாவினார். என்.சி.பி. கட்சியின் சட்டசபைக்குழு தலைவராக இருந்த அவர் பாஜக அரசு அமைக்க ஆதரவு கடிதம் அளிக்க, பாஜகவை ஆட்சியமைக்குமாறு கோஷ்யாரி அழைத்தார். முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் இன்று காலையில் அவசர, அவசரமாக பதவியேற்றார். அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.

அதற்கு பிறகு அம்மாநில அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து தங்கள் கூட்டணியில் மாற்றமில்லை என்றனர். மேலும், என்.சி.பி. கட்சியின் 48 எம்.எல்.ஏ.க்கள் சரத்பவாரிடம் உள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், கவர்னரின் செயலை எதிர்த்து சிவசேனா, என்.சி.பி. மற்றும் காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷன், சஞ்சீவ் கன்னா ஆகியோர் விசாரித்தனர். நீதிபதிகள் இன்று(நவ.26) காலை அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

நம்பிக்கை வாக்கெடுப்பு தள்ளிப் போடப்பட்டால் குதிரைப் பேரம் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகரித்து விடும். ஜனநாயக மாண்புகளை நாம் பாதுகாக்க வேண்டியது அவசியம். எனவே, இன்றே தற்காலிக சபாநாயகரை கவர்னர் நியமிக்க வேண்டும். நாளை(நவ27) மாலை 5 மணிக்கு புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க வேண்டும். அதைத் தொடர்ந்து, பட்நாவிஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும். அதே சமயம், வாக்கெடுப்பு நடவடிக்கைகளை தொலைக்காட்சிகளில் நேரலை செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

கவர்னர் கோஷ்யாரி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த டிசம்பர் 7ம் தேதி வரை அவகாசம் கொடுத்திருந்தார். அதை சுப்ரீம் கோர்ட் நாளை என்று மாற்றியது பாஜகவுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. பட்நாவிஸ் அரசு பிழைக்குமா என்பது நாளை மாலை தெரியும். தற்போது வரை சிவசேனா-என்சிபி-காங்கிரஸ் கூட்டணி தங்களிடம் 162 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதாக கூறுகின்றன. மீதி 126 பேர் மட்டுமே பட்நாவிஸ் முகாமில் உள்ளனர். எனவே, மெஜாரிட்டியை நிரூபிக்க அதிசயம் நடந்தால் உண்டு.

You'r reading மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. சுப்ரீம் கோர்ட் அதிரடி.. Originally posted on The Subeditor Tamil

More Delhi News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை