இரவில் ஆழ்ந்து உறங்க முடியவில்லையா? இவை காரணமாக இருக்கலாம்..!

Cant sleep well at night? These may be due ..!

by SAM ASIR, Sep 24, 2020, 19:36 PM IST

சிலரை காலையில் பார்க்கும்போது மிகவும் சோர்வாகக் காணப்படுவர். கேட்டால், "இரவில் தூக்கமே இல்லை," என்பர். பலர், இரவில் தங்களால் உறங்கவே முடியாது என்று நம்பவே தொடங்கியிருப்பர். இரவில் ஆழ்ந்து உறங்குவது ஆரோக்கியத்திற்கு அவசியம். உறங்க முடியவில்லையென்றால் அதன் பின்னே ஏதாவது ஒரு மருத்துவ காரணம் இருக்கக்கூடும். பின்வரும் பிரச்சனைகள் பெரும்பாலும் தூக்கத்தைத் தடை செய்வதாகக் கண்டறியப்பட்டுள்ளன.

சிறுநீர் கழித்தல்

அடிக்கடி சிறுநீர் கழிப்பது தூக்கத்திற்குப் பெரிய இடைஞ்சல். சிறுநீர்ப் பையில் ஏற்படும் பிரச்சனையால் அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டிய கட்டாயத்தால் உலகெங்கும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்சினை ஆண்களை விடப் பெண்களுக்கே அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

சில பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்வதால் இப்பிரச்சினையைத் தவிர்க்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். காஃபைன் அடங்கிய காஃபி போன்ற பானங்களை அதிகம் குடிப்பதைத் தவிர்க்கவேண்டும். காஃபைன், சிறுநீர்ப் பையின் செயல்பாட்டைத் தூண்டும். நீர் பிரிதலை அதிகப்படுத்தும். ஆகவே, சிறுநீர் அடிக்கடி கழியும் பிரச்சனை உள்ளவர்கள் காஃபி அருந்துவதை, காஃபைன் உள்ள பண்டங்களைச் சாப்பிடுவதை நிறுத்தலாம்.

இரவு படுக்கைக்குச் செல்வதற்கு சில மணி நேரம் முன்பாகவே நீர் அருந்தாமல் இருப்பதும் நல்ல பலனைத் தரும். இவற்றைச் செய்த பிறகும் இரவு அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டியதிருந்தால் மருத்துவரை அணுகுதலே நல்லது.

மெனோபாஸ்

மாதவிடாய் நிற்கக்கூடிய மெனோபாஸ் பருவம், ஹார்மோன், உடலியல் மற்றும் மனவியல் மாற்றங்களைப் பெண்களுக்கு உண்டுபண்ணக்கூடும். மெனோபாஸ் நிலையிலுள்ள பெண்களும் உறக்கமின்மையால் அவதிப்படுவது தெரிய வந்துள்ளது. மனப்பாங்கு மாற்றம், தூக்கமின்மை, உறக்கத்தைக் கெடுக்கும் சுவாச பிரச்சனைகள் இப்பருவத்தில் வரக்கூடும். இதற்கு மருத்துவர்கள் ஈஸ்ட்ரோஜன் சிகிச்சை அளிப்பர். ஆகவே மருத்துவரை அணுகவும்.

ஒற்றைத் தலைவலி

'மைக்ரேன்' எனப்படும் ஒற்றைத் தலைவலியும் உறக்கத்தின் எதிரியாகக் கருதப்படுகிறது. தூங்க முடியாமல் தடுப்பது மட்டுமன்றி உறக்கத்திலிருந்து எழும்புவதற்கு இந்த தலைவலி காரணமாகிறது. போதுமான உறக்கம் இல்லாதது மட்டுமன்றி, தேவைக்கு அதிகமாக உறங்குவதும் கூட ஒற்றைத் தலைவலி வருவதற்குக் காரணமாகலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

போதுமான அளவு நீர்ச்சத்து உடலில் இருக்கும்படி சாப்பிடுவது, நீர் அருந்துவது, ஊட்டச்சத்து கொண்ட சமச்சீர் உணவுப் பழக்கம் மற்றும் எப்போதும் துடிப்பாக இருப்பது போன்றவை ஒற்றைத் தலைவலி வரும் வாய்ப்பை குறைக்கும்.

மெக்னீசியம் குறைபாடு

உற்சாகமான மனப்பாங்கினை பேணுதல், மனக்கலக்கம் மற்றும் மனவழுத்தத்தைக் குறைத்தல் இவற்றுக்கு மெக்னீசியம் சத்து காரணமாகிறது. அதன் மூலம் நிம்மதியான உறக்கத்திற்கும் இது உதவுகிறது. அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆய்வுகளில் மெக்னீசியம் சத்து குறைபாட்டால் அநேகர் உறக்கமின்மையால் தவிப்பதாகத் தெரிய வந்துள்ளது.

மெக்னீசியம் குறைபாட்டால் தசைகளில் இறுக்கம், நரம்புகளில் பிரச்சனை, பயம், பதற்றத்தின்போது சுரக்கும் அட்ரீனலின் ஹார்மோன் உயர்வு, செரோடோனின் என்னும் வேதிப்பொருள் சுரப்பு குறைவு போன்ற குறைபாடுகள் உண்டாகின்றன. இவை தூக்கமின்மைக்குள் தள்ளுகின்றன.

உடல் கடிகாரம்

சிர்காடியன் ரிதம் என்பது நம் உடலின் காலத்தைக் கணிக்கும் தன்மையைக் குறிக்கிறது. நம் உடல் 24 மணி நேரக் கடிகார அமைப்பைப் பின்பற்றுகிறது. பெரும்பாலும் வெளிப்புற ஒளியைக் கொண்டே நம் உடல் இரவு, பகலை கணிக்கிறது. நவீனக் காலத்தில் பிரகாசமான விளக்குகள் மற்றும் இரவில் கணினி, ஸ்மார்ட்போன் இவற்றைப் பயன்படுத்துவதால் நம் கண்கள் ஒளியைப் பார்க்கின்றன. அது உடலின் கடிகார அமைப்பைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. இரவு பத்து மணியான பிறகும் வெளிச்சம் இருப்பதால் உறக்கத்தை வரவிடாமல் உடலியல் கடிகாரம் தவிர்க்கிறது.

இரவில் நெடுநேரம் கழித்து உறங்குவதால் பகலில் தாமதமாக எழுவதும் உடலியல் கடிகார செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். காஃபி, மது அருந்துவதைத் தவிர்ப்பதும், இரவில் கணினி, ஸ்மார்ட்போன் போன்ற சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதும் நல்ல உறக்கத்திற்கு உதவும்.

மன அழுத்தம்

தூக்கமின்மைக்குக் காரணமாக இருந்தும் பெரும்பாலும் உணரப்படாத பிரச்சனைகள் மன அழுத்தம் மற்றும் மனக்கலக்கம் போன்றவையாகும். மனப்போக்கில் மாற்றம், முன்பு மகிழ்ச்சியாக அனுபவித்தவற்றில் ஆர்வமில்லாத நிலை, எதிர்பாராத உடல் எடை இழப்பு மற்றும் அதிகரிப்பு, தற்கொலை எண்ணம் போன்றவை இருந்தால் மன அழுத்தம் இருக்கக்கூடும். இந்த மன அழுத்தமே தூக்கமின்மைக்குக் காரணமாக இருக்கலாம். மருத்துவ உதவியை நாடுவதே சிறந்த தீர்வாகும்.

ஊக்கமருந்து

ஆஸ்துமா, தைராய்டு பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு உபாதைகளுக்குச் சாப்பிடும் மருந்துகளில் ஊக்கமருந்து (ஸ்டீராய்டு) இருக்கக்கூடும். இதுபோன்ற மருந்துகளைச் சாப்பிடுகிறவர்களுக்கு உறக்கம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

சில உடல்நலக் குறைவுகளுக்கு மருத்துவரிடம் செல்லாமல் நாமே மருந்துக் கடைகளில் வாங்கி சாப்பிடுகிறோம். வலி நிவாரணி, ஒவ்வாமை (அலர்ஜி), மற்றும் சளி, எடை குறைப்பு இவற்றுக்கு நாமாக எடுத்துக்கொள்ளும் மருந்துகளில் ஊக்கமருந்து அல்லது காஃபைன் போன்றவை கலந்திருக்கக்கூடும். இவையும் தூக்கத்திற்கு இடைஞ்சல் விளைவிக்கும்.

எந்த உடல்நல குறைபாட்டுக்கும் மருத்துவரை அணுகாமல் மருந்து உண்பதை நிறுத்தினால் இப்பிரச்சனையைத் தவிர்க்கலாம்.

நுரையீரல் பிரச்சனை

சுவாச மண்டலம் தொடர்பான உடல்நல குறைபாடுகள் உறக்கத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடும். அவற்றுக்கு மருத்துவர்கள் தரும் மருந்தின் காரணமாகவும் தூக்கம் கெடலாம். சுவாச மண்டலம் அல்லது நுரையீரல் தொடர்பான பாதிப்புகளுக்கு நீங்கள் ஏற்கனவே மருந்து சாப்பிட்டு வந்தால், உறக்க பிரச்சனையை மருத்துவரிடம் கூறுங்கள். அவர் அதற்கான தீர்வுக்கு வழிகாட்டுவார்.

சைனஸ் பிரச்சனை

மூக்கின் உட்புற வளைவில் இருக்கும் பிரச்சனை அல்லது மூக்கடைப்பு போன்றவையும் உறக்கத்தைக் கெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மூக்கடைப்பின் காரணமாக சரியாகச் சுவாசிக்க முடியாததால் உறக்கம் கெடலாம். மூக்கு வழியாகச் சுவாசிக்க முடியாதவர்களுக்குக் குறட்டை வரும். மூக்கின் உட்புற பிரச்சனை, பரம்பரை ரீதியாகச் சிலருக்கு ஏதாவது விபத்திற்குப் பிறகு தோன்றக்கூடும். இதை மருத்துவர் சரி செய்வதன் மூலம் நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.

You'r reading இரவில் ஆழ்ந்து உறங்க முடியவில்லையா? இவை காரணமாக இருக்கலாம்..! Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை