6 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசு நேற்று திடீரென பேருந்து கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி அறிவித்தது. இந்த கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவித்தது.
பணமதிப்பு இழப்பை போல், கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு 12 மணி நேரத்திற்குள் அமல் படுத்தப்பட்டதால் அன்றாடம் பேருந்தில் பயணிக்கும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
இன்று காலை பேருந்தில் பயணம் செய்த சாமானிய மக்களுக்கு இந்த கட்டண உயர்வு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கட்டண உயர்வு தெரியாததால், பேருந்து நடத்துனரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் அதிகாலை கோயம்பேடு செல்லும் பேருந்துகளில் ஏறிய அடித்தட்டு மக்கள், வியாபாரிகள் இந்த கட்டண உயர்வு குறித்து அறியாமல் நடத்துனரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்தனர்.
அதிக பணம் தர முடியாது என்று கூறினர். இதன் காரணமாக என்ன செய்வதென்று தெரியாமல் நடத்துனர்களும் விழிபிதுங்கி நின்றனர்.
பேருந்து கட்டணம் உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு, ஒருசில நாட்கள் கழித்து அமல் படுத்தியிருந்தால் அனைவருக்கும் இந்த அறிவிப்பு போய் சேர்ந்திருக்கும், இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்று அதில் பயணித்த பயணிகள் தங்களின் நியாயமான ஆதங்கத்தை நடத்துனரிடம் முன்வைத்தனர்.
பெரும்பாலான பஸ்களில் நடத்துனர்களிடம் வாக்குவாதம் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் இதர பண பயன்களை வழங்குவதற்கு, அரசின் கஜானாவில் கை வைக்காமல் பயணிகளின் பாக்கெட்டில் கை வைப்பதாக, அரசாங்கத்தின் மீது பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த கட்டண உயர்வை கண்டித்து எதிர்கட்சிகள் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.
ஒருபக்கம் "பஸ்ல போற கடைசி தலைமுறை நாம தான்" என்பது போன்ற நக்கல் வார்த்தைகளுடன் மீம்ஸ் கிரியேட்டர்கள் தெறிக்க விட்டு வருகிறார்கள்..
கோயம்பேட்டிலிருந்து பேருந்து மூலம் காய்கறி வாங்கி வந்து விற்பனை செய்யும் மூதாட்டி ஒருவரிடம் இந்த கட்டண உயர்வு பற்றி கேட்டபோது;- "எப்போதும்போல இன்று காலை கோயம்பேடுக்கு பஸ் ஏறினேன்… எப்போதும் 12 ரூபாய்க்கு டிக்கெட் வாங்குவேன்… ஆனால் இன்று 20 ரூபாய் கண்டக்டர் கேட்டார். நான் ஏன் என்று கேட்டால் டிக்கெட் விலை ஏறிடிச்சி என்கிறார்"… ஒரு ராத்திரியிலேயாப்பா விலையை கூட்டிட்டாங்க... அநியாயமே இருக்கேப்பா….!!! என்றார் பரிதாபமாக.
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள, அன்றாடம் பேருந்தில் பயணம் செய்யக்கூடிய அடித்தட்டு ஏழை மக்கள், மற்றும் நடுத்தர மக்கள், இந்த விலை உயர்வைக் கேட்டதும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் இந்த கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட போவது அவர்கள் தானே..!
பேருந்துக்கென அவர்கள் இனி மாதம் இரண்டு மடங்கு பணத்தை ஒதுக்க வேண்டுமே...!
அரசாங்கள் தனது ஒரு நாள் இழப்பீடான ரூபாய் 9 கோடியை, பயணிகளிடம் விதித்துள்ள கட்டண உயர்வு மூலம் சரி செய்ய முயல்கிறது,
பயணிகள் தங்கள் கூடுதல் செலவான கட்டண உயர்வை, எதிலிருந்து எடுத்து செலுத்துவார்கள்.
ஆடம்பர செலவில் மிச்சம் பிடித்தா...?
பேருந்தில் செல்வதையே ஆடம்பரமாக நினைக்கும் பாமர மக்கள் வாழும் நாடு இது. சாப்பாட்டில் மிச்சம் பிடித்தோ, அத்தியாவசிய செலவில் மிச்சம் பிடித்தோ தானே இனி பேருந்தில் டிக்கெட் எடுக்கப்போகிறார்கள்.
இவைகளை நினைத்து பார்க்குமா அரசு..
போக்குவரத்து கழகம் என்பது சேவைத்துறை என அறிவித்த இந்த அரசு தான், இன்று வழிப்பறியில் ஈடுபடுவது போல் தோன்றுகிறது,
கட்டண உயர்வு காரணமாக, இனி இரயிலில் போவதா.? பஸ்ஸில் போவதா.? என தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாமலும், தன் சூழலுக்கு தகுந்த வசதிகள் கிடைக்காமலும், காலையிலே தன் வாழ்வை தொடங்க அஞ்சுகிறான் அடித்தட்டு தமிழன்.
மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டிய அரசு, அவர்களை வாழ விடாமல் நசுக்குவது என்பது கொடுங்கோல் ஆட்சியை விட மிக ஆபத்தானது.
அண்டை மாநிலங்களை ஒப்பிட்டு காரணம் காட்டும் அதே நேரத்தில், அவர்களின் ஊழலற்ற ஆட்சிமுறையையும், தன் மக்கள் தன்னிறைவு அடைவதற்காக செய்யப்படும் நடவடுக்கைகளையும், மக்களின் போராட்டங்களுக்கு உடனடியாக செவி கொடுத்து நடவடிக்கைகளில் இறங்கும் மக்களாட்சி முறைகளையும்...
நன்கு கவனித்து, அவைகளையும் பின்பற்றினார்களேயானால், இந்நாடு செழிக்குமே.