பேன்சி நம்பருக்காக அதிக லட்சங்களை செலவிட்டு வாயடைக்க வைத்துள்ளார் கேரள தொழிலதிபர் ஒருவர்.
கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் பாலகோபால். கேரளாவில் மருந்து விநியோக தொழில் செய்து வருகிறார். இவர் சமீபத்தில் போர்ச் 718 பாக்ஸ்டர் (Porsche 718 Boxster) என்று சொகுசுக் காரை ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கினார். இந்தக் காருக்கு பேன்சி நம்பர் வாங்குவதற்காக கேரள தலைநகரான திருவனந்தபுரம் ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்த பதிவெண் ஏலத்தில் பங்குபெற்றார். ``KL-01 CK 1'' என்ற பதிவெண்ணுக்காக ஏலம் நடத்தப்பட்டது. ரூ.500 தொடங்கிய ஏலத்தில் கேரளாவின் முக்கிய தொழிலதிபர்கள் கலந்துகொண்டனர்.
மொத்தம் ஏழு ரவுண்டுகள் நடந்த ஏலத்தில் பாலகோபாலுக்கு துபாயில் தொழில் நடத்தி வரும் இரண்டு தொழிலதிபர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். இருவரில் ஒருவர் ரூ.10 லட்சம் வரைக்கும், ஒருவர் 25.5 லட்சம் வரைக்கும் ஏலம் கேட்க கடைசியாக ரூ.30 லட்சத்தில் ஏலத்தை முடித்து அந்த பேன்சி நம்பரை தன் வசப்படுத்தினார் பாலகோபால். 30 லட்சத்துடன் மேலும் ஒரு லட்ச ரூபாய் விண்ணப்ப கட்டணமாக பெறப்பட்டு இந்தியாவில் அதிக தொகை செலவு செய்து வாங்கிய பேன்சி நம்பராக இது மாறியது.
இதற்கு முன் 2012ம் ஆண்டு ஹரியானாவில் 26 லட்சத்துக்கு பேன்சி நம்பர் வாங்கப்பட்டதை சாதனையாக இருந்தது. தற்போது இதனை முறியடித்து சாதனை படைத்துள்ளார் பால கோபால். கார் பிரியரான இவர் அதிக தொகை கொடுத்து பேன்சி நம்பர் வாங்குவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பு கடந்த 2017ம் ஆண்டும் தனது டொயோட்டோ லேண்ட் குரூஸர் காருக்கு ``KL-01 CB 1'' என்ற பதிவெண்ணை அதிக தொகை கொடுத்து வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.