இந்தியாவில் அரசியல் கட்சிகள் இனிமேல் அனாமத்து விளம்பரங்களை பேஸ்புக்கில் வெளியிட முடியாது. தேர்தல் நெருங்கும் வேளையில் வாட்ஸ்அப் அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து பேஸ்புக் நிறுவனமும் அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.
வாட்ஸ்அப்பை அரசியல் கட்சிகள் பிரச்சார களமாக மாற்றினால் தடை செய்து விடுவோம் என்று அந்நிறுவனம் நேற்று தான் பகிரங்க எச்சரிக்கை விடுத்திருக் தது. இந்நிலையில் மற்றொரு சமூக வலைதளமான பேஸ்புக் இன்று மற்றொரு அதிர்ச்சியை இந்திய அரசியல் கட்சிகளுக்கு கொடுத்துள்ளது.
இனிமேல் அரசியல் விளம்பரங்களை வெளியிட்டால் விளம்பரத்தை வெளியிடுபவர் யார் என்பது கட்டாயம் இடம் பெற வேண்டும். பணம் பெற்று வெளியிடப்படும் விளம்பரம் எனில் யாருக்காக வெளியிடப்படுகிறது என்று குறிப்பிடப்பட வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளது.
மேலும் ஏமாற்றுத்தனமாக அரசியல் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதை பேஸ்புக் பயன்படுத்துவோர் கண்டறிந்தால் உடனே அதனை புகார் செய்யவும் எளிதான வழியை ஏற்படுத்தியுள்ளது பேஸ்புக். அவ்வாறான விளம்பரம் வெளியான பக்கத்தில் வலது மேல் பகுதியில் உள்ள 3 புள்ளிகளை டச் செய்தால் பேஸ்புக் லைப்ரரியில் பதிவாகி பரிசீலனைக்குப் பின் அழிக்கப்பட்டு விடுமாம்.
இது போன்ற ஏராளமான கட்டுப்பாடுகள் இந்த மாதம் 21-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியாவுக்கான பொறுப்பாளர் சிவ்நாத் துக்ரால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தேர்தல் நேர்மையாக நடைபெற பேஸ்புக்கும் தனது பங்களிப்பை அளிக்க விரும்புகிறது. விளம்பரங்கள், உண்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில் நாடு களில் இது போன்ற கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்ட நிலையில் 4-வது நாடாக இந்தியாவில் அமல்படுத்தப்படுகிறது என்றார்.