மோடியின் குமரி விசிட் திடீர் ஒத்திவைப்பு! தம்பித்துரையின் விஸ்வரூபம் தான் காரணமாம்!!

பிரதமர் மோடியின் கன்னியாகுமரி விசிட் திடீரென தள்ளி வைக்கப்பட்டதற்கு பாஜகவுடனான கூட்டணிக்கு அதிமுகவில் எழுந்துள்ள கோஷ்டிப் பூசலும், லோக்சபாவில் தம்பித்துரையின் தடாலடி பேச்சுமே காரணம் என்று கூறப்படுகிறது.

எப்பாடுபட்டாவது மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட வேண்டும் என பாஜக தரப்பு தொடர் நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது.
ஆட்சிக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என்ற பயத்தில் எதற்கெடுத்தாலும் மத்திய அரசுக்கும், பாஜகவுக்கும் ஆமாம் சாமி போட்டு வந்தது அதிமுக அரசு.

ஆனால் தற்போது கூட்டணிக்கு பாஜக கொடுக்கும் நெருக்கடிகளால் அதிமுகவிலேயே முட்டல் மோதலாகிக் கிடக்கிறது.

கூட்டணிப் பேச்சுவார்த்தையில் 12 தொகுதிகள் வரை டிமாண்ட் வைக்கிறது பாஜக என்று கசியும் செய்திகளால் தற்போதைய அதிமுக எம்பிக்கள் பலருக்கும் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

பாமகவும், தேமுதிகவும் கூட்டணியில் இணைந்தால் அவர்களுக்கும் கொடுத்தது போக எஞ்சிய 20 தொகுதிகளில் தான் அதிமுக போட்டியிட வேண்டியிருக்கும் என்பதே கலக்கத்துக்கு காரணமாம்.

தற்போது அதிமுக எம்பிக்கள் 37 பேரில் பாதிப்பேருக்கு சீட் கிடைக்காமல் போய்விடும் என்பதால் அதிமுக எம்பிக்கள் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை பின்னால் அணிவகுக்கத் தொடங்கி விட்டனராம்.

ஆரம்பம் முதலே பாஜகவுடன் முட்டல் மோதலாக இருந்து வந்த தம்பித்துரை சமீப காலமாக பாஜக பற்றி பகிரங்கமாகவே பேசி வருகிறார். தமிழகத்திற்கு ஒன்றுமே செய்யாத பாஜகவை தோளில் தூக்கி சுமக்க வேண்டுமா? என்றெல்லாம் தம்பித்துரை விமர்சித்து கூட்டணிக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தார்.

அதிமுக எம்பிக்கள் பாஜகவுக்கு எதிராக தம் பின்னால் அணிவகுத்த உற்சாகத்தில் தான் நேற்று லோக்சபா விவாதத்தில் மத்திய அரசை கிழிகிழியென கிழித்தாராம் தம்பித்துரை. ரூபாய் நோட்டின் கலரை மாற்றியது தான் நீங்கள் செய்த சாதனை என்று கூறி பாஜக மீது தம்பித்துரை அடுக்கடுக்கான புகார்களை கூறினார்.

இதனால் அதிமுக-பாஜக கூட்டணி உடன்பாடு தற்போகைக்கு முடிவு எட்டப்படாது என்றே, தெரிகிறது.

விரைவில் கூட்டணியை உறுதி செய்து பாஜக போட்டியிடும் தொகுதிகளில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை பிரச்சாரத்தில் ஈடுபடச் செய்யலாம் என்ற பாஜகவின் திட்டம் அம்போவாகியுள்ளது.

இதனாலேயே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் கன்னியாகுமரி தொகுதியில் பிரதமர் மோடியின் 19-ந் தேதி பிரச்சாரப் பயணம் மார்ச் 1-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது என்ற தகவல் கசிந்துள்ளது.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

Recent News