திரிபுராவில் பிரதமர் மோடி பங்கேற்ற விழா மேடையில் மாநில பாஜக பெண் அமைச்சரின் இடுப்பை மற்றொரு அமைச்சர் கிள்ளுவது போன்ற வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கண்டனக் குரல் எழுப்ப, இல்லை .. இல்லை ... தப்பா எதுவும் நடக்கலை என இரு அமைச்சர்களும் விளக்கம் கொடுத்துள்ளனர்.
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் கடந்த சனிக்கிழமை பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக் கூட்டம் நடைபெற்றது.கூட்ட மேடையில் பாஜகவைச் சேர்ந்த மாநில சமூக நலத்துறை பெண் அமைச்சர் சந்தானா சக்மாவின் இடுப்பை மற்றொரு அமைச்சரான மனோஜ் காந்தி தேப் என்பவர் கிள்ளுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையாகியுள்ளது.
பாஜக அமைச்சரின் செயலுக்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்ததுடன் அமைச்சர் தேப் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.மார்க்சிஸ்ட் கட்சியின் மகளிர் பிரிவினரோ, பாஜக பெண் அமைச்சருக்கு அநீதி, அவமானம் இழைக்கப்பட்டதாக பெரும் கண்டனப் பேரணியே நடத்த அமைச்சரின் இடுப்பு கிள்ளல் விவகாரம் திரிபுராவில் பெரும் சர்ச்சையானது.
இந்தச் சர்ச்சை பெரிதாகவே சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் இருவரும் மேடையில் என்ன நடந்தது என்று இன்று விளக்கமளித்துள்ளனர்.
பிரதமர் மோடியை சரியாக பார்க்க முடியாத அளவுக்கு பெண் அமைச்சர் முன்னால் நின்றிருந்தார். அதனால் அவரை லேசாகத் தொட்டு விலகி நிற்கச் சொன்னேன் என்று அமைச்சர் தேப் கூற, பெண் அமைச்சர் சக்மாவோ, கெட்ட எண்ணத்திலோ, அநாகரீகமாகவோ அமைச்சர் தேப் நடந்து கொள்ளவில்லை. திட்டமிட்டே களங்கப்படுத்துகின்றனர் என்று விளக்கமளித்துள்ளார். இருந்தாலும் திரிபுராவில் சர்ச்சை தீர்ந்தபாடில்லை.