அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்காக பாமக மீது மட்டும் விமர்சனம் ஏன்? என்று கேட்டுள்ள அன்புமணி ராமதாஸ், திராவிட நாடு கோரிக்கைக்காக எத்தனை திமுகவினர் சுடுகாடு சென்றனர் என்றும் காட்டமாக கேள்வி விடுத்துள்ளார்.
பாமக பொதுக் குழுக் கூட்டம் அக்கட்சித் தலைவர் ராமதாஸ் தலைமையில் புதுச்சேரியில் நடைபெற்றது. பொதுக்குழுக் கூட்டத் தீர்மானம் குறித்து அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நாடாளுமன்றத் தேர்தல் குறித்து முடிவு எடுக்கும் முழு அதிகாரம் தலைவர் ராமதாஸூக்கு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவுடனான கூட்டணி குறித்து பாமக நிர்வாகிகளின் கருத்தை கேட்டறிந்த பின் எடுத்த கூட்டு முடிவு .
திமுக உள்ளிட்ட கட்சிகளும் எங்களை கூட்டணிக்காக அணுகின. இப்போது தோல்வி பயத்தில் அவதூறுகளை அள்ளி வீசுகின்றன. அதிமுகவை விமர்சித்ததாலேயே அக்கட்சியுடன் கூட்டணி வைக்கக் கூடாதா? கூட்டணி வைத்தாலும் நாங்கள் எங்கள் கொள்கையை விட்டுத் தர மாட்டோம்.
அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் தமிழக மக்களும், ஊடகங்களும் எங்கள் மீது மட்டும் விமர்சனம் வைப்பது ஏன்?
எங்கள் கூட்டணியை விமர்சிக்கும் திமுகவினர், அடைந்தால் திராவிட நாடு.... இல்லாவிட்டால் சுடுகாடு .... என்ற சபதமிட்டனரே?எத்தனை பேர் சுடுகாடு சென்றனர்? என்று அன்புமணி விளாசித் தள்ளினார்.