ஏர் இந்தியா நிறுவனத்தின் மெயின் சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று காலை முதல் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விமான நிலையங்களில் ஏராளமான பயணிகள் தவித்து வருகின்றனர்.
பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகிறது. ஏர் இந்தியா உள்நாட்டிலும், உலகின் பல நாடுகளுக்கும் விமான சேவையை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று காலையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் முக்கிய சர்வரில் கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த நிறுவனத்தின் விமான போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விமான நிலையங்களில் ஏர் இந்தியா பயணிகள் காத்து கிடக்கின்றனர்.
மும்பை விமான நிலையத்தில் மட்டும் சுமார் 2 ஆயிரம் ஏா் இந்தியா பயணிகள் காத்து கிடப்பதாக தகவல் வந்துள்ளது. இது குறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அஸ்வானி லோகானி கூறுகையில், மெயில் சர்வரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்த கோளாறு விரைவில் சரிசெய்யப்படும் என்று தெரிவித்தார்.