மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தில் தண்ணீர்க்காக பெண்கள் படும் துயரம் காண்போர் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓடும் வைதர்ணா ஆற்றின் குறுக்கே, வைதர்ணா அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் நீர்த்தேக்கம் தான் மும்பையின் பிரதான நீர் ஆதாரம்.இந்த அணையில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பார்டி-சி-வாடி (Barde chi wadi) என்ற கிராமம். இங்கு பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கின்றார்கள். வைதர்ணா அணைக்கு அருகாமையில் இருக்கும் இந்த கிராமத்தில் கடுமையான குடிநீர் பஞ்சம். இதனால், பெண்கள் கிணற்றில் இறங்கி தண்ணீரை எடுக்கும் அவலத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த கிராமத்துப் பெண்கள் தண்ணீர் எடுக்கும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில்,`மிகவும் ஆழமான கிணற்றில் தரை அடியில் தேங்கி உள்ள தண்ணீரை எடுக்கக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு கிணற்றுக்குள் பெண்கள், குழந்தைகள் ஏறி இறங்குகிறார்கள். உள்ளே இறங்கி அவர்கள் தண்ணீரை எடுத்துத் தர..அதை மேலே இருந்து மற்றொருவர் இழுத்துக் கொள்கிறார். இப்படியாகப் பெண்கள் தண்ணீர் எடுக்கும் காட்சி காண்போர் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.
வைதர்ணா அணையில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மும்பை நகருக்கு மட்டும் ஒரு நாளைக்கு 100 லிட்டர் முதல் 307 லிட்டர் வரை தண்ணீர் அனுப்பப்படுகிறது. ஆனால், அணையின் அருகே உள்ள கிராமத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. இதனை அரசு கண்டுகொள்ள வேண்டும், இதற்கான உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்து வருகின்றனர். இங்குள்ள குடிநீர் பிரச்னையை அரசு உடனடியாக தீர்க்க வேண்டும், பழங்குடியின மக்களை அரவணைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் எழுந்து வண்ணமாக உள்ளன.