உத்தரப்பிரதேசத்தில் மோதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்காமல் திரும்பிச் செல்ல மாட்டேன் என்று சொன்ன பிரியங்கா காந்தி, அதே போல் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த வாரம் சோன்பத்ரா பகுதியில் அம்பா என்ற ஊரில் நிலப் பிரச்னையால் இரு தரப்பினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்ேபாது துப்பாக்கியால் மாறி, மாறி சுட்டனர். இதில் 10 பேர் வரை உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். வன்முறைச் சம்பவம் தொடர்பாக 24 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று(ஜூலை 19) காலையில் திடீரென சோன்பத்ராவுக்கு சென்றார். அவர் நாராயண்பூர் அருகே சென்ற போது அவரை போலீசாரும், வருவாய்த் துறை அதிகாரிகளும் சேர்ந்து தடுத்தனர். அப்போது அவர், ‘‘யாருடைய உத்தரவின் பேரில் என்னை தடுக்கிறீர்கள்? எந்த சட்டத்தில் என்னை போக விடாமல் தடுக்கிறீர்கள். நான் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவே செல்கிறேன். நான் ஏன் அங்கு போகக் கூடாது?’’என்று பிரியங்கா காந்தி வாக்குவாதம் செய்தார்.
தொடர்ந்து அவர் சாலையில் அமர்ந்து சிறிது நேரம் தர்ணா செய்தார். அப்போது நாராயண்பூர் போலீசார் அங்கு வந்து அவரை எழுப்பி காரில் அழைத்து சென்றனர். பிரியங்கா காந்தியை வாரணாசிக்கு தென்கிழக்கே 40 கி.மீ. தொலைவில் உள்ள சுனார் என்ற ஊருக்கு அழைத்து சென்ற அதிகாரிகள் அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்க வைத்தனர். அதன்பின், அவரை டெல்லிக்கு திரும்பிச் செல்லுமாறு வலியுறுத்தினர். ஆனால், அதை ஏற்க மறுத்த பிரியங்கா காந்தி, நேற்றிரவு அந்த விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இதன்பின், இன்று காலையில் அவர் சுனாரில் முக்கிய சாலைக்கு வந்தமர்ந்து தர்ணா செய்யத் தொடங்கினார். அவருடன் காங்கிரஸ் கட்சியினரும் தர்ணாவில் அமர்ந்தனர். அவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராகவும், உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.
இதற்கிடையே, பிரியங்கா காந்தி, செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘நான் சோன்பத்ராவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற வந்திருக்கிறேன். அவர்களை சந்திக்காமல் இங்கிருந்து திரும்பிச் செல்ல மாட்டேன். உ.பி.யில் உள்ள பாஜக அரசு, நிலச்சுவான்தார்களுக்கு ஆதரவாக ஏழை மக்களை ஒடுக்குகிறது. ஏழைகளுக்கு எதிரான அரசாக யோகி ஆதித்யநாத் அரசு உள்ளது’’ என்றார்.
எனினும், அவரை சோன்பத்ரா செல்வதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை.
இதற்கிடையே, உ.பி. காங்கிரஸ் நிர்வாகிகள், சோன்பத்ராவுக்கு சென்று அங்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அழைத்து கொண்டு சுனாருக்கு வந்தனர். ஆனால், அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. அதன்பிறகு போலீசாருடன் வாக்குவாதம் செய்து, பின்னர் அவர்களை பிரியங்கா காந்தியிடம் அழைத்து வந்தனர். சோன்பத்ராவில் இருந்து வந்திருந்த பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பிரியங்கா, அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவர்களுக்காக தான் போராடத் தயாராக இருப்பதாகவும், தேவையான உதவிகள் செய்வதாகவும் உறுதியளித்தார்.