சந்திரயான்-2 விண்கலத்தை ஏவி விண்வெளித் திட்டத்தில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டியதற்கு, இஸ்ரோ விஞ்ஞானிகளை நாடே புகழ்ந்து வருகிறது.இந்நிலையில் விண்வெளி ஆராய்ச்சியில் நாம் இந்த முன்னேற்றம் பெற ஜவஹர்லால் நேரு தான் காரணம்.சந்திரயான் திட்டத்திற்கு முதன்முதலாக ஒப்புதல் வழங்கியதும் மன்மோகன் சிங் தான் என்று காங்கிரஸ் கட்சி தம்பட்டம் அடித்ததை கேலி செய்யும் வகையில், குரங்கிலிருந்த வந்தவன் தான் மனிதன். அதனால் எல்லாப் பெருமையும் குரங்குகளுக்கே சேரும் என்று குசும்புத்தனமாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் சுப்பிரமணிய சாமி .
விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா வல்லரசு நாடுகளுக்கு சவால் விடும் வகையில் கிடு கிடுவென முன்னேற்றம் அடைந்துள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக, உலகிலேயே முதல் நாடாக சந்திரயான்-2 விண்கலத்தை நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியதன் மூலம் மேலும் ஒரு புதிய சாதனையை படைத்தது இந்தியா. இந்த அரிய சாதனையை நிகழ்த்தியதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்ட இந்தியத் தலைவர்கள் பலரும் இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி பெருமைப்படுத்தியுள்ளனர். இந்திய நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒட்டு மொத்த எம்.பி.க்களும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்தினர்.
பாஜக தேசிய தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவும் விஞ்ஞானிகளை பாராட்டுயதுடன், கூடவே பிரதமர் மோடியின் ஆட்சியில் இஸ்ரோ போன்ற முக்கிய நிறுவனங்கள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளன என்று மோடியையும் வாழ்த்து தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
அமித் ஷாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், காங்கிரஸ் கட்சி சார்பில் டுவிட்டரில் பதிவிடப்பட்டது. அதில், 1962-ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டக்குக்கு வித்திட்டவர் அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு தான் காரணம். 2008-ல் சந்திரயான்-2 திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியதும் அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தான் என்று காங்கிரஸ் தரப்பில் தம்பட்டம் அடித்தனர்.
பல நூறு விஞ்ஞானிகளின் பத்தாண்டுகளுக்கு மேலான விஞ்ஞான அறிவாலும்,உழைப்பாலும் கிடைத்த இந்த வெற்றிக்கு, பாஜகவும் காங்கிரசும் சொந்தம் கொண்டாடியது சர்ச்சையாகி விட்டது. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் சர்ச்சை சாமியான சுப்பிரமணிய சாமி கிண்டலாக ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், பரிணாம வளர்ச்சியில், குரங்கிலிருந்து வந்தது தான் மனித இனம் .எனவே எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பது போல், சந்திரயான் புகழும் குரங்குகளுக்கே சேரும் என்று குசும்பாக பதிவிட்டு நிறையப் பேரை ரசிக்கவும், சிரிக்கவும் வைத்துள்ளார்.
மத்திய பட்ஜெட் எப்படி..? எந்தப் பக்கம் கருத்து சொல்வது..?- சர்ச்சையான சு.சாமியின் 'டிவிட்'