காஷ்மீரில் ராணுவம் குவிப்பு வீடு, வீடாக என்.ஐ.ஏ. சோதனை தீவிரவாதிகள் மீது தாக்க திட்டம்?

10 thousand more troops deployed in kashmir. tension prevailed

by எஸ். எம். கணபதி, Jul 28, 2019, 12:50 PM IST

காஷ்மீரில் திடீரென கூடுதலாக 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் வந்து இறங்கியுள்ளனர். மேலும், பாரமுல்லா மாவட்டத்தில் 4 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் வீடு, வீடாகச் சென்று சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு பதற்றம் நிலவுகிறது.


மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா பொறுப்பேற்ற பிறகு, காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 16ம் தேதி வரை காஷ்மீரில் பாதுகாப்பு படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 126 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 75 வீரர்களும் உயிரிழந்தனர். இந்த 75 பேரில் புலவாமா தாக்குதலில் உயிரிழந்த 40 சி.ஆர்.பி.எப் வீரர்களும் அடங்குவர்.


தற்போது, அமர்நாத் யாத்திரையின் போது, புலவாமா தாக்குதலைப் போன்று மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால், ராணுவம் குவிக்கப்பட்டது. குறிப்பாக, 32 ஆயிரம் ராணுவ வீரர்கள், அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 25ம் தேதியன்று மேலும் 100 கம்பெனிகளை காஷ்மீருக்கு மத்திய அரசு அனுப்பிவைத்துள்ளது. அதாவது 10 ஆயிரம் வீரர்கள் கூடுதலாக வந்து இறங்கியுள்ளனர்.


இவர்களையும் சேர்த்தால் காஷ்மீரில் மட்டும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ராணுவ வீரர்கள் உள்ளனர். திடீரென ராணுவம் குவிக்கப்பட்டதால் காஷ்மீரில் பதற்றம் நிலவுகிறது. பாலகோட்டில் தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய ராணுவம் குண்டு வீசி தாக்கியது போல், மீண்டும் ஏதேனும் ஆபரேஷன் நடவடிக்கையில் ஈடுபடக் கூடும் என்ற பேச்சும் அடிபடுகிறது.
இதற்கிடையே, பாரமுல்லா மாவட்டத்தில் 4 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் குழுக்களாக சென்று, வீடு, வீடாக சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ளவர்கள், நிதி வசூலித்து கொடுப்பவர்கள் ஆகியோரை குறி வைத்து இந்த ரெய்டு நடப்பதாக தெரிகிறது.

You'r reading காஷ்மீரில் ராணுவம் குவிப்பு வீடு, வீடாக என்.ஐ.ஏ. சோதனை தீவிரவாதிகள் மீது தாக்க திட்டம்? Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை