திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் அளிக்க டெல்லி ஐகோர்ட் மறு்த்து விட்டது.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு வந்த விவகாரத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியதாக சிபிஐயும், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளன. இந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் செப்.5ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து அவரது சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. பிரபல வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் அவருக்காக வாதாடினர்.
மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் கைத், சிதம்பரத்திற்கு ஜாமீன் அளிக்க மறுத்தார். ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சிதம்பரம் வெளிநாட்டுக்கு தப்பி விடுவார் என்று சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடியதை ஏற்கவில்லை. அதே சமயம், அவர் நாடாளுமன்ற உறுப்பினர். முக்கியப் பதவியில் இருந்தவர். எனவே, செல்வாக்கு மிக்க அவர், சாட்சியங்களை கலைத்து விட வாய்ப்புள்ளது. மேலும், வழக்கு இப்போதுதான் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, அவருக்கு ஜாமீன் அளிக்க முடியாது என்று கூறியுள்ளார்.