ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன்.. சுப்ரீம் கோர்ட் வழங்கியது

Chidambaram gets bail from Supreme Court in CBIs INX Media case, stays in ED custody

by எஸ். எம். கணபதி, Oct 22, 2019, 11:45 AM IST

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு சுப்ரீம் கோர்ட் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு வந்த விவகாரத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக கூறி, அமலாக்கத் துறையும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்தது. சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் செப்.5ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதன்பின், அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றமும், அதைத் தொடர்ந்து டெல்லி ஐகோர்ட்டும் தள்ளுபடி செய்தன. இதையடுத்து, சிதம்பரம் ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இம்மனு இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பானுமதி, ரிஷிகேஷ்ராய் ஆகியோரை கொண்ட பெஞ்ச் மனுவை விசாரித்தது. இருதரப்பு வாதங்கள் முடிவுற்ற நிலையில், தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நீதிபதி பானுமதி பெஞ்ச் இன்று தீர்ப்பு கூறியது. சிதம்பரத்தை ஒரு லட்சம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனிலும் விடுதலை செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். சிதம்பரம் தனது பாஸ்போர்ட்டை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், அவர் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டிருக்காவிட்டால் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, சிதம்பரத்தை ஐ.என்.எக்ஸ் மீடியா சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த 16ம் தேதியே அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர். தற்போது அவர் அமலாக்கத் துறையினரின் காவலில்தான் உள்ளார். எனவே, அந்த வழக்கிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்தால் மட்டுமே அவர் விடுதலையாக முடியும். அல்லது அமலாக்கத் துறையினரின் காவல் முடிந்ததும் அவர் மீண்டும் திகார் சிறைக்கு அனுப்பப்படுவார்.

You'r reading ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன்.. சுப்ரீம் கோர்ட் வழங்கியது Originally posted on The Subeditor Tamil

More Delhi News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை