கோட்சேவை புகழ்ந்து பேசிய பிரக்யா தாக்குர் மன்னிப்பு..

Bjp Pragya Thakur forced to apologise again in LS.

by எஸ். எம். கணபதி, Nov 29, 2019, 17:06 PM IST

மக்களவையில் கோட்சேவை தேசபக்தர் என்று பேசிய பாஜக உறுப்பினர் பிரக்யா தாக்குர் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார்.

மக்களவையில் கடந்த 27ம் தேதியன்று, எஸ்.பி.ஜி. பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டது. இந்த மசோதாவின் மீது திமுக உறுப்பினர் ஆ.ராசா பேசுகையில், அரசியல் காரணங்களுக்காக சிறப்பு பாதுகாப்பை விலக்கிக் கொள்ளக் கூடாது. ராஜிவ் காந்தி கொலைக்கு பின்னர் அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி பாதுகாப்பை விலக்கியது தவறு. மகாத்மா காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ்.காரர் நாதுராம் கோட்சே, 32 ஆண்டுகளாக காந்தி மீது ஆத்திரம் கொண்டிருந்ததாக கூறியிருந்தார்... என்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, பாஜக உறுப்பினரான சாது பிரக்யா தாக்குர் குறுக்கிட்டு, நீங்கள் ஒரு தேசபக்தரை(நாதுராம் கோட்சே) உதாரணமாக சொல்லக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். உடனே, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து, பிரக்யா தாக்குர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கு பின்னர், மகாத்மாவை கொன்ற கோட்சேவை தேசபக்தர் என்று பாஜக சொல்கிறது என்று எதிர்க்கட்சிகள் பெரும் பிரச்னையை கிளப்பினர். இதனால், பிரக்யா தாக்குர் பேச்சை பாஜக கண்டித்து நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், மக்களவையில் இன்று(நவ.29) பிரக்யா தாக்குர் பேசினார். அப்போது அவர், எனது பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. நான் மகாத்மா காந்தியின் பங்களிப்பை மதிக்கிறேன் என்று இந்தியில் ஒரு பக்கத்துக்கு எழுதியிருந்ததை வாசித்தார். அதன்பிறகு, தன்னை பயங்கரவாதி என்று ராகுல்காந்தி கூறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதையடுத்து, எதிர்க்கட்சிகள் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் கடும் அமளியில் ஈடுபட்டனர். பிரக்யா முறையாக மன்னிப்பு கேட்கவில்லை என்று குற்றம்சாட்டினர். இதையடுத்து, அவை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடிய போது சபாநாயகரின் அறிவுறுத்தலின்படி, பிரக்யா தாக்குர் மீண்டும் மன்னிப்பு கேட்டார். அவர், நான் கோட்சேவை தேசபக்தர் என்று சொல்லவில்லை. எனது ஒரு வரி குறுக்கீட்டில் கோட்சே பெயரைக் கூட உச்சரிக்கவில்லை. நான் பேசியது யாரையாவது மனம் நோகச் செய்திருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் என்று மீண்டும் மன்னிப்பு கேட்டார்.

இதையடுத்து இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக சபாநாயகர் ஓம்பிர்லா கூறினார்.

You'r reading கோட்சேவை புகழ்ந்து பேசிய பிரக்யா தாக்குர் மன்னிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அதிகம் படித்தவை