திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் மூலம் தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் கேரளாவில் கடந்த இரு மாதங்களாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கில் தூதரகத்தின் முன்னாள் ஊழியர்களான ஸ்வப்னா சுரேஷ், சரித்குமார் உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். முதலில் இந்த வழக்கை சுங்க இலாகா விசாரித்து வந்தது. ஆனால் இந்த சம்பவத்தில் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று தகவல் கிடைத்ததை தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பான என் ஐ ஏ விசாரணையை தொடங்கியது. இந்த தங்கம் கடத்தலில் கறுப்புப் பண பரிமாற்றமும் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததை தொடர்ந்து மத்திய அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே கேரள உயர் கல்வித்துறை அமைச்சரான ஜலீல், மத்திய அரசின் அனுமதி பெறாமல் அமீரகத்திலிருந்து சில உதவிகளை பெற்றது தெரியவந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் மலப்புரம் மாவட்டத்தில் ஏழை, எளியவர்களுக்கு உதவி வழங்கும் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தேவையான பொருட்கள் அமீரகம் சார்பில் வழங்கப்பட்டது. இதுதவிர துபாயிலிருந்து அமீரக தூதரகம் வழியாக நூற்றுக்கணக்கான புனித குர்ஆன் நூல்களையும் அமைச்சர் ஜலீல் இறக்குமதி செய்து பல பகுதிகளில் விநியோகம் செய்தார். அந்த பார்சல்களில் குர்ஆன் மட்டுமல்லாமல் வேறு சில மர்ம பொருட்கள் இருந்ததாகவும் பாஜா குற்றம்சாட்டியுள்ளது.
வெளியுறவு துறை சட்டத்தின்படி தூதரகத்துடன் மாநில அமைச்சர்கள், மாநில அதிகாரிகள் உட்பட யாரும் நேரடியாக தொடர்பு கொள்ளக் கூடாது. வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்றே தொடர்பு கொள்ள வேண்டும். ஆனால் அமைச்சர் ஜலீல் எந்த முன் அனுமதியும் பெறாமல் தூதரகத்தை தொடர்பு கொண்டு இந்த உதவிகள் பெற்றது கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இதையடுத்து அமைச்சர் ஜலீலுக்கு எதிராக விசாரணை நடத்த மத்திய நிதி அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் தேசிய புலனாய்வு அமைப்பும் ஜலீலுக்கு எதிராக விசாரணை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அனுமதி இல்லாமல் வெளிநாட்டு உதவி பெற்ற கேரள அமைச்சருக்கு எதிராக மத்திய அரசு விசாரணை
Advertisement