கொரோனா பாதிப்பின் காரணமாக உலகெங்கும் பல்வேறு துறைகள் வருமானத்தை இழந்துள்ளன. மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுள் விமான போக்குவரத்தும் ஒன்று. நாடுகளிடையே விமான போக்குவரத்து நடைபெறாததால் விமான நிறுவனங்கள் பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளன.வருவாய் இழப்பை ஈடுகட்ட வெவ்வேறு நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
பணி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏ380 ஜம்போ விமானத்தை உணவகமாக மாற்ற முடிவெடுத்துள்ளது. இதற்கு 642 சிங்கப்பூர் டாலர் (அமெரிக்க டாலர் 470) ரூபாய் கட்டணமாக அறிவித்துள்ளது.
விமானத்தின் முதல் வகுப்பில் அமர்ந்து நான்கு வகை உணவுப்பொருள்கள் கொண்ட முழு உணவைச் சாப்பிடுவதற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எகானமி வகுப்பில் அமர்ந்து மூன்று வகை உணவுப் பொருள் அடங்கிய உணவைச் சாப்பிடுவதற்கு 53 சிங்கப்பூர் டாலர் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவே ஜெட் விமானத்தில் அமர்ந்து சாப்பிடக் குறைந்த கட்டணமாகும்.
ஷங்காய் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு அடுக்கு விமானங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்காகப் பாதி இருக்கைகள் வெறுமையாக விடப்படும். அக்டோபர் 24 மற்றும் 25 தேதிகளில் சாப்பிடுவதற்கான அறிவிப்பை வெளியிட்ட அரை மணி நேரத்தில் மதிய உணவுக்கான 900 இருக்கைகள் முன் பதிவு செய்யப்பட்டு விட்டன. மக்களின் ஏகோபித்த வரவேற்பைக் கண்டு இந்த வசதி மேலும் இரண்டு நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு நாள்களும் ஏ380 ஜெட் விமானத்தில் அமர்ந்து மதியம் மற்றும் இரவு உணவு சாப்பிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.