பாஜகவின் ஆதரவு சேனலான ரிபப்ளிக் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் மற்றும் பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி, மும்பையில் இருந்து கொண்டே மகாராஷ்டிராவின் உத்தவ் தாக்கரே அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். எப்போதுமே பாஜகவைத் தவிர மற்ற கட்சியினரை மிகவும் மட்டமாக விமர்சித்து அந்த டி.வி. செய்திகளை வெளியிடுவது வழக்கம். சிவசேனா தலைவரும் முதல்வருமான உத்தவ் தாக்கரேவையும், அந்த கூட்டணி அரசையும் ரிபப்ளிக் டி.வி. கடுமையாக விமர்சித்தது, அரசுக்கு கோபத்தை உண்டு பண்ணியது. இந்த சூழலில், அர்னாப் கோஸ்வாமியை மும்பையில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர்.
மோசடி வழக்கில் அவரை மகாராஷ்டிரா அரசு கைது செய்துள்ளது. இதற்கிடையே அவருடைய கைதை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் மகாராஷ்டிர அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இவரை போல் மற்ற பாஜக தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் கர்நாடக காங்கிரஸின் முக்கிய பிரமுகரும், முன்னாள் எம்பியும், நடிகையுமான குத்து ரம்யா, அர்னாப் கைதை கிண்டலடித்து வரவேற்றுள்ளார். அர்னாப் கைது குறித்த செய்தியை டேக் செய்து, ``தீபாவளி சீக்கிரமே வந்துவிட்டது. எல்லோரும் லட்டு சாப்பிடுங்கள்" என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.