குடும்பத்தோடு தீர்த்துக் கட்டி விடுவோம் ஸ்வப்னாவுக்கு போலீஸ் மிரட்டல் பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவு

by Nishanth, Dec 9, 2020, 16:05 PM IST

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுக்கு கொலை மிரட்டல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் சிறையில் இருக்கும் போது அவரை சந்திக்க வந்த போலீசார், கொலை மிரட்டல் விடுத்ததாக நீதிமன்றத்தில் அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து ஸ்வப்னாவுக்கு பாதுகாப்பு அளிக்க சிறைத்துறை டிஜிபிக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் முதலில் எர்ணாகுளம் சிறையிலும், பின்னர் திருச்சூர் மத்தியச் சிறையிலும் அடைக்கப்பட்டார். இதன் பின்னர் அங்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறி திருவனந்தபுரத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சமூக இணையதளங்களில் ஸ்வப்னாவின் ஒரு ஆடியோ வைரலாக பரவியது. அதில், மத்திய விசாரணை அதிகாரிகள் தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயனின் பெயரைக் கூறுமாறு கட்டாயப்படுத்துவதாக ஸ்வப்னா கூறியிருந்தார். இதையடுத்து சுங்க இலாகா, மத்திய அமலாக்கத் துறை உட்பட மத்திய விசாரணைக் குழுக்களுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர்.இந்நிலையில் ஸ்வப்னா மற்றும் இந்த வழக்கில் இன்னொரு முக்கிய குற்றவாளியான சரித்குமார் ஆகிய இருவரும் கடந்த ஒரு வாரமாகச் சுங்க இலாகாவில் காவலில் இருந்தனர். அப்போது அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது தங்கள் இருவரும் தங்க கடத்தல் வழக்கில் பல முக்கிய ரகசியங்கள் குறித்துத் தெரிவிக்க விரும்புவதாகக் கூறினர்.

இதையடுத்து இருவரிடமிருந்தும் ரகசிய வாக்குமூலம் பெற நீதிமன்றம் தீர்மானித்தது. இதையடுத்து கடந்த 4 நாட்களாக இருவரும் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தனர். இந்நிலையில் ஸ்வப்னா எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். அதில், திருவனந்தபுரம் சிறையில் இருக்கும்போது 4 போலீசார் தன்னை வந்து சந்தித்ததாகவும், அப்போது விசாரணை அதிகாரிகளிடம் எந்த முக்கிய தகவலையும் கூறக்கூடாது என்றும், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் பெயரைக் கூறினால் குடும்பத்தோடு தீர்த்துக்கட்டி விடுவோம் என்று மிரட்டியதாகவும் தெரிவித்திருந்தார். எனவே தனக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஸ்வப்னா அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து ஸ்வப்னாவுக்கு உடனடியாக உரியப் பாதுகாப்பு அளிக்கக் கேரள சிறைத்துறை டிஜிபிக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தற்போது திருவனந்தபுரம் சிறையில் உள்ள ஸ்வப்னாவுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஸ்வப்னாவுக்கு போலீசாரே கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகக் கூறப்படுவது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்வப்னா வெளியிட்டுள்ள இந்த அதிர்ச்சித் தகவல் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய திருப்புமுனையாக அமையும் எனக் கருதப்படுகிறது. இதற்கிடையே ஸ்வப்னாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தக் கேரள சிறைத்துறை தென்மண்டல டிஐஜிக்கு சிறைத்துறை டிஜிபி ரிஷி ராஜ் சிங் உத்தரவிட்டுள்ளார்.

You'r reading குடும்பத்தோடு தீர்த்துக் கட்டி விடுவோம் ஸ்வப்னாவுக்கு போலீஸ் மிரட்டல் பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை