முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான பூட்டா சிங் (86) இன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பிரதமர் மோடி, ராகுல் காந்தி மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.பூட்டா சிங் 1934 மார்ச் 21ம் தேதி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிறந்தார். முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்திக்கு மிகவும் நம்பிக்கையான தலைவர்களில் இவரும் ஒருவராக இருந்தார். 1962ல் சாத்னா தொகுதியில் போட்டியிட்டு இவர் முதன்முதலாக எம்பியாக வெற்றி பெற்றார்.
பிரபல தலித் தலைவராக இருந்த இவர், 1986 - 89ல் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தார். 1984 - 86ல் விவசாயத் துறை அமைச்சராகவும், நரசிம்ம ராவ் அமைச்சரவையில் 1995 -96ல் உணவுத் துறை அமைச்சராகவும் இருந்தார். பின் 2004 முதல் 2006ம் ஆண்டு வரை பீகார் மாநில கவர்னராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். இவர் 8 முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக 1978 முதல் 1980 வரை இருந்தார். அரசியலுக்கு வருவதற்கு முன் இவர் பத்திரிகையாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகப் பூட்டா சிங் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். கடந்த அக்டோபரில் கோமாவில் தள்ளப்பட்ட இவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பிரதமர் மோடி ராகுல் காந்தி மற்றும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.