மாசி மாத பூஜைகளுக்கு சபரிமலையில் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி ஆன்லைனில் முன்பதிவு கட்டாயம்

by Nishanth, Feb 10, 2021, 09:17 AM IST

சபரிமலையில் வரும் 13ம்தேதி தொடங்க உள்ள மாசி மாத பூஜைகளில் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவு இம்முறையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்த வேண்டும். கொரோனா பரவலை தொடர்ந்து கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜைகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். ஆனால் கடந்த வருடம் மண்டல, மகரவிளக்கு பூஜைகளில் அதிகபட்சமாக தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனையும் கட்டாயமாக்கப்பட்டது. சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டதால் கோவில் வருமானம் கடுமையாக குறைந்தது. வழக்கமாக மண்டல, மகரவிளக்கு காலங்களில் சபரிமலை கோவிலில் 300 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கும். ஆனால் இம்முறை சுமார் 20 கோடி மட்டுமே வருமானம் கிடைத்தது. இதனால் கோவில் ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை வரும் 12ம் தேதி திறக்கப்பட உள்ளது. மறுநாள் 13 முதல் 17ம் தேதி வரை பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் மாசி மாத பூஜைகளில் தினமும் 15 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேரள அரசிடம் கோரிக்கை விடுத்தது.

இது தொடர்பாக ஆலோசிப்பதற்காக திருவனந்தபுரத்தில் தேவசம் போர்டு, சுகாதாரத் துறை, காவல் துறை மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகளின் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு சுகாதாரத் துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது கேரளாவில் கொரோனா பரவல் அதிக அளவில் இருப்பதால், பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரித்தால் நோய் பரவல் மேலும் அதிகரிக்கும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர். எனவே மண்டல, மகரவிளக்கு காலங்களைப் போலவே மாசி மாத பூஜையின் போதும் தினமும் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதித்தால் போதும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து வரும் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை சபரிமலையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டது. மேலும் ஆன்லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களை மட்டுமே அனுமதிப்பது என்றும், அனைவரும் கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

You'r reading மாசி மாத பூஜைகளுக்கு சபரிமலையில் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி ஆன்லைனில் முன்பதிவு கட்டாயம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை