பிளஸ் டூ மாணவி சரமாரி குத்திக் கொலை உறவினருக்கு வலைவீச்சு

by Nishanth, Feb 20, 2021, 11:45 AM IST

கேரள மாநிலம் இடுக்கியில் பள்ளிக்குச் சென்ற பிளஸ்டூ மாணவி சரமாரியாகக் குத்திக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் ஒரு முட்புதரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவரது உறவினரான வாலிபர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.இடுக்கி மாவட்டம் பள்ளிவாசல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மகள் ரேஷ்மா (17). அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். தற்போது கேரளாவில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக நேற்று ரேஷ்மா பள்ளிக்குச் சென்று இருந்தார். வழக்கமாக மாலை 4 மணிக்குள் அவர் வீடு திரும்பி விடுவார்.

ஆனால் நேற்று மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்குத் திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். பள்ளிக்குச் சென்று விசாரித்த போது அவர் வீட்டுக்குச் சென்று விட்டதாகக் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பள்ளிக்கு முன் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைப் பரிசோதித்த போது மாணவி ரேஷ்மா ஒரு வாலிபருடன் நடந்து செல்வது தெரியவந்தது.

அந்த வாலிபர் யார் என போலீசார் விசாரித்தனர். இதில் அவர் ரேஷ்மாவின் தந்தை ராஜேஷின் உறவினர் அனுராஜ் என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அப்பகுதியில் உள்ள ஒரு நீரேற்று நிலையம் அருகே மாணவி ரேஷ்மாவை அனுராஜுடன் பார்த்ததாக அப்பகுதியினர் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் விசாரணை நடத்திய போது அங்குள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் முட்புதரில் கத்திக் குத்து காயங்களுடன் ரேஷ்மா பிணமாகக் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரேஷ்மாவை அனுராஜ் தான் கொன்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர். பிளஸ் டூ மாணவி குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் இடுக்கியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading பிளஸ் டூ மாணவி சரமாரி குத்திக் கொலை உறவினருக்கு வலைவீச்சு Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை