ஐபிஎல் லீக் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே, அபுதாபியில் நடந்த போட்டியில் சஞ்சு சாம்சனின் விக்கெட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஸ்மித் அவுட் ஆக, பட்லருடன் கைகோர்த்தார் சஞ்சு சாம்சன்.
ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரரான இவர், முதல் இரண்டு போட்டியிலும் முறையே சென்னைக்கு எதிராக 74(32) , பஞ்சாப் அணிக்கு எதிராக 85(42) ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார்.
இந்நிலையில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் இவர் களம் கண்ட போது முன்னணி வீரர்கள் இருவரும் அவுட் ஆகிய நிலையில், இவர் ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஆனால் இவர் 4 ரன்களை எடுத்து இருந்த போது சஹல் வீசிய ஓவரில் , அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஆனால் மறு பரிசீலனையில் பந்து தரையில் பட்டது போல் தெரிகிறது. எனவே இந்த தவறான முடிவினால் ஆட்டத்தின் போக்கே மாறியது என ரசிகர்கள் புலம்புகின்றனர். மேலும் பலர் மூன்றாம் நடுவரை சமூகவலைதளங்களில் வசைபாடியும் வருகின்றனர்.
இந்த போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.