ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (17-10-2020) போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு ஷார்ஜாவில் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது சென்னை அணி. நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இறங்கிய சென்னை அணிக்கு வழக்கம் போல் தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கிய சென்னையின் சுட்டி குழந்தையான் சாம் கரண், துஷார் தேஷ்பாண்டே வீசிய முதல் ஓவரிலேயே நோர்ட்ஜாவிடம் கேட்ச்சாகி வெளியேறினார்.
பின்னர் கைகோர்த்த பிளசில் மற்றும் வாட்சன் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை மெதுவாக உயர்த்தினர். சென்னை அணி பெரிய இலக்கை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 28 பந்தில் 6 பவுண்டரி என 36 ரன்களை விளாசிய வாட்சன் இதுவே போதுமென்று நோர்ட்ஜா வீசிய பந்தில் போல்ட்டாகி வெளியேறினார். ஒருபுறம் அணியின் ஸ்கோரை உயர்த்த பிளசில் போராடி கொண்டிருக்க அவருடன் இணைந்த ராயுடு அதிரடியாக இன்னிங்சை தொடங்கினார். ஆனால் பிளசில் 58 ரன்னில் ரபாடா ஓவிரில் நடையை கட்டினார்.
15 ஓவர் முடிவில் சென்னை அணி 109/3 என்ற நிலையில் இருந்தது. களத்தில் ராயுடுடன், சென்னையின் நாயகன் கேப்டன் தோனி களமிறங்கினார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தோனி, ஆட்டோ பாம் போல வெடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புஸ்பானம் போல கேட்ச்சாகி வெளியேறி ரசிகர்களுக்கு மறக்க முடியாத அதிர்ச்சியளித்தார். ஒருகட்டத்தில் 140 ரன்களையாவது எட்டுமா என்ற கேள்வி எழுந்தது. களத்தில் இருந்த அம்பத்தி ராயுடுவுடன், ஜடேஜா கைகோர்க்க இருவரும் சரமாரியாக விளாச சென்னை அணி ஒரு சுமாரான ரன்னை தாண்டியது. 13 பந்தில் 4 சிக்சர்களை விளாசி 33 ரன்களை விளாசிதள்ளிய ஜடேஜா ரசிகர்களின் எதிர்ப்பில் இருந்து தப்பித்து கொண்டார்.
அதிரடியாக விளையாடிய அம்பத்தி ராயுடு 25 பந்தில் 1 பவுண்டரி, 4 சிக்சர் விளாசி 45 ரன்களை சேர்த்தார் இதன் மூலம் சென்னை அணி இருபது ஓவர் முடிவில் 179 ரன்களை எடுத்தது. டெல்லி அணி இந்த போட்டிக்கு முன்னர் விளையாடிய 8 போட்டியில் 6 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முன்னிடத்தில் இருந்தது. எவ்விதமான இக்கட்டான சூழ்நிலையும் இல்லாததால் நிதானமாக ஆட்டத்தை ஆட தயாராக இருந்தது டெல்லி அணி.
இருபது ஓவரில் 180 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியை முதல் ஓவரிவேயே மிரட்டியது சென்னை அணி. கடைசி இரண்டு போட்டிகளில் பெரிதாக சோபிக்காத தீபக் சஹர் இந்த போட்டியின் முதல் ஓவரை வீசி ப்ரித்வி ஷாவை காட்டன் போல்ட்டாக்கி வெளியேற்றினார். மிரண்டு போன டெல்லி அணி நிதானமான ஆட்டத்தை தொடங்கியது. பின்னர் களமிறங்கிய ரகானே இந்த போட்டியிலாவது ஜொலிப்பார் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8 ரன்னில் சஹர் ஓவரில் அவட்டாகி வெளியேறினார்.
26/2 என்ற பரிதாபமான நிலையில் இருந்தது டெல்லி அணி, பவர்பிளேயில் சிறப்பாக பந்து வீசிய சென்னை அணி வெற்றி பெற்றுவிடும் என்ற நிலையிலேயே இருந்தது. பின்னர் தவானுடன் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கைகோர்க்க இருவரும் தடுப்பாட்டத்தை தொடங்கினார். ஆனால் தோள்பட்டை காயத்தால் அவதிபட்ட ஐயர் பெரிதாக சோபிக்கவில்லை. ப்ராவோ பந்தில் 23 ரன்னில் அவுட்டாகி ஐயர் வெளியேறினார்.
ஐம்பது பந்தில் 85 ரன்னெடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலையில் தவான் மட்டும் களத்தில் நிற்க, அதிரடி மன்னன் ஸ்டேய்னஸ் கைகோர்க்க இருந்த நம்பிக்கையை அவர் 24 ரன்களில் பொய்யாக்கி, ஷர்துல் தாக்குர் ஓவரில் அவுட்டாகி வெளியேறினார். 26 பந்தில் 42 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் விக்கெட் கீப்பர் கேரியும் அவுட்டாக சென்னை அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஒருவர் பின் ஒருவராக அவுட்டாக, தவான் மட்டும் களத்தில் போராடினார்.
சென்னை வீரர்கள் தவானுக்கு மட்டும் அவ்வளவு வாய்ப்புகளை அள்ளி வழங்கினர். 4 வாய்ப்புகளையும் தவறவிட்ட சென்னை அணிக்கு பரிசாக தனது முதல் சதத்தை ( இந்த சீசனில்) அளித்தார் தவான். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ப்ராவோ இடம் ஒரு ஓவர் மிச்சம் இருந்தது, ஆனால் காலில் ஏற்பட்ட காயத்தால் வெளியேறிய அவர் திரும்பவில்லை. பின்னர் கரண் ஷரமாவா அல்லது ஜடேஜாவா என்ற நிலையில் ஒரு வழியாக ஜடேஜா வை பந்து வீச அழைத்தார் கேப்டன் கூல்.
பேட்டிங் செய்து கொண்டிருந்த அக்சர் பட்டேல் கடைசி ஓவரில் 3 சிக்சர்களை விளாசி அணியை வெற்றியடைய செய்தார். கிடைத்த அனைத்து வாய்ப்பையும் தவறவிட்ட சென்னை அணி இந்த போட்டியில் தோற்று, பிளாஆப் செல்வதற்கான வாய்ப்பையும் தவறவிட்டது. அணிக்கு பெரிய நம்பிக்கையை அளித்த தவான் 58 பந்தில் 14 பவுண்டரி, 1 சிக்சர் என 101 ரன்களை விளாசி, ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.