பழி தீர்க்குமா பஞ்சாப்! மீண்டும் சூப்பர் ஒவருக்கு வாய்ப்பிருக்குமா?

Punjab to settle the blame! Will there be a chance for a Super Over again?

by Loganathan, Oct 20, 2020, 16:07 PM IST

ஐபிஎல் லீக் சுற்றின் 38வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் துபாயில் மோத உள்ளன. கடந்த முறையும் இந்த இரு அணிகளும் இந்த மைதானத்தில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.டெல்லி அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 7 ல் வெற்றியும், 2 ல் தோல்வியும் பெற்றுள்ளது. அபுதாபியில் நடந்த ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் மட்டுமே டெல்லி அணி தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 7 வெற்றிகளின் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை 9 போட்டிகளில் 3 ல் வெற்றியும், 6 ல் தோல்வியும் கண்டு பின்னடைவைச் சந்தித்துள்ளது. பெங்களூர் அணிக்கெதிரான இரண்டு போட்டியிலும் பஞ்சாப் அணி வென்றுள்ளது, மும்பை அணிக்கு எதிராகத் துபாயில் நடந்த போட்டியில் இரண்டு சூப்பர் ஓவர்களை விளையாடி வெற்றி பெற்றுள்ளது.

பஞ்சாப் அணி மீதமுள்ள 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் பிளேஆப் விளையாடுவதற்கான வாய்ப்புண்டு என்பதால், இந்த போட்டியில் பஞ்சாப் அணி நிச்சயமாகப் போராடும். ஆனால் டெல்லி அணி கிட்டத்தட்ட பிளேஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டது. எனவே புதிய வீரர்களை டெல்லி அணி களமிறக்க வாய்ப்புண்டு.கடந்த முறை இரு அணிகளும் துபாயில் சந்தித்தபோது போட்டியானது டிராவில் முடிந்து, பின்னர் சூப்பர் ஓவரின் மூலம் த்ரில் வெற்றியைப் பெற்றது டெல்லி அணி.

டெல்லி அணியைப் பொறுத்தவரை இன்றைய போட்டியில் ரிஷப் ஃபண்ட் விளையாட வாய்ப்புண்டு. ஒருவேளை ஃபண்ட் விளையாடினால் அலெக்ஸ் கேரிக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு, மீண்டும் ஹெட்மயர் களமிறங்க வாய்ப்புண்டு. சரியான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளதால் ஃபண்ட் இல்லாமல் கூட டெல்லி அணி விளையாட வாய்ப்புண்டு.

டெல்லி அணியில் கடந்த போட்டியில் விளாசிய தவானின் சதம் அணிக்கான நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும். ஸ்ரேயாஸ் ஐயர், ப்ரித்வி ஷா மற்றும் ஸ்டேய்னஸ் என்ற பட்டாளமே உள்ளது இது அணிக்கான கூடுதல் பலம். வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரை ரபாடா, நோர்ட்ஜா மற்றும் துஷார் தேஷ்பாண்டே போன்றோரின் மிரட்டல் அணிக்கான பலம். சுழல் பந்துவீச்சைப் பொறுத்தவரை அஷ்வின் மற்றும் அக்சர் பட்டேல் போன்றோர் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இது பஞ்சாப் அணிக்கு நெருக்கடியை உண்டாக்கும்.

பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை, அணியின் மொத்த நம்பிக்கையே ராகுல் மற்றும் அகர்வால் மட்டுமே என்ற நிலையைக் கடந்த போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்ட கெய்ல் மற்றும் பூரன் மாற்றியுள்ளனர்.இந்த முன்னணி வீரர்கள் சோபிக்க தவறினால் பஞ்சாப் அணி மீண்டும் மண்ணை கவ்வ வாய்ப்புண்டு. பஞ்சாப் அணியின் பந்து வீச்சு சீசனின் தொடக்கத்தில் இருந்ததை விட தற்போது மெருகேறியுள்ளது.

முகமது ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங் போன்றோர் இன்றும் மிரட்ட வாய்ப்புண்டு. சுழல் பந்து வீச்சைப் பொறுத்தவரை ரவி பிஷோனாய் மற்றும் முருகன் அஷ்வின் ஆட்டத்தின் போக்கை மாற்றவும் வாய்ப்புண்டு.இதுவரை துபாயில் நடந்த அனைத்து போட்டிகளிலும் டெல்லி அணி வென்றுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யும் அணி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

More Ipl league News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை