ஐபிஎல்லில் இருந்தும் ஓய்வு பெற்றார் ஷேன் வாட்சன் சென்னைக்காக விளையாடியதை வாழ்நாளில் மறக்க முடியாது.

by Nishanth, Nov 3, 2020, 21:08 PM IST

ஆஸ்திரேலிய அதிரடி கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார். சென்னை அணிக்காக 3 வருடங்கள் விளையாடியதை தன் வாழ்நாளில் மறக்கவே முடியாது என்று இவர் கூறுகிறார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக பல வருடங்கள் சிறப்பாக விளையாடியவர் ஷேன் வாட்சன். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 59 டெஸ்டுகள், 190 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இவர் 3,731 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 5,757 ரன்களும், டி20 போட்டிகளில் 1,462 ரன்களும் குவித்துள்ளார். முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 9,751 எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 4 சதங்களும், 24 அரை சதங்களும் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 9 சதங்களும், 33 அரை சதங்களும் அடித்துள்ள இவர், டி20 போட்டிகளில் ஒரு சதமும் 19 அரை சதங்களும் அடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 75 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 168 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 48 விக்கெட்டுகளையும் இவர் சாய்த்துள்ளார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இவர் ஓய்வு பெற்றார். இதற்கிடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இவர் முதலில் விளையாடத் தொடங்கினார். இதன் பின்னர் பெங்களூர் அணியில் சிறிதுகாலம் விளையாடிய இவர், கடந்த 2018 சீசனில் முதன் முறையாக சென்னை அணியுடன் இணைந்தார். இதன் பின்னர் தான் இவரது அதிரடி ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது. 2018 சீசனில் இறுதிப் போட்டியில் வாட்சனின் அதிரடி செஞ்சுரியால் ஐதராபாத் அணியை தோற்கடித்து சென்னை கோப்பையை வென்றது. அன்றைய போட்டியில் வாட்சன் 57 பந்துகளில் 118 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.

கடந்த வருடம் நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியிலும் சென்னைக்காக வாட்சன் மிக சிறப்பாக விளையாடினார். ஆனால் சென்னையால் கோப்பையை அப்போது வெல்ல முடியவில்லை. சென்னை அணி ஒரேயொரு ரன்னில் மும்பையிடம் தோற்று கோப்பையை இழந்தது. அந்தப் போட்டியிலும் வாட்சன் 59 பந்துகளில் 80 ரன்கள் குவித்து சென்னை அணியின் டாப் ஸ்கோரர் ஆனார். அன்றைய போட்டியின் போது கால் முட்டில் காயமடைந்து ரத்தம் சொட்ட சொட்ட வாட்சன் விளையாடினார். போட்டிக்குப் பின்னர் அந்த காயத்திற்கு 6 தையல்கள் போடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக வாட்சன் அறிவித்துள்ளார். தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், எல்லாம் ஒரு கனவு போல தொடங்கியது.

ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட வேண்டும் என்பது எனது சிறுவயது கனவாகும். என்னுடைய தாயிடம் நான் அந்த விருப்பத்தை கூறிய நினைவு இப்போதும் எனக்கு இருக்கிறது. இப்போது அனைத்து போட்டிகளில் இருந்தும் நான் ஓய்வு பெறுவதாக அறிவிக்கும் போது அந்த கனவு நனவான மகிழ்ச்சி எனக்கு உள்ளது. எனக்கு மிகவும் பிடித்தமான சென்னை சிஎஸ்கே அணிக்காக மூன்று வருடங்கள் விளையாடியதை என்னால் மறக்கவே முடியாது. காயங்கள் காரணமாக நான் அவதிப்பட்டு வந்த போதிலும் 39 வயது வரை என்னால் கிரிக்கெட் விளையாட முடிந்தது என்னுடைய பெரும் அதிர்ஷ்டமாகவே நான் கருதுகிறேன் என்று வாட்சன் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.இந்த சீசனில் வாட்சன் 11 போட்டிகளில் 299 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் குவித்த 83 ரன்கள் தான் இந்த சீசனில் இவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். கடந்த அக்டோபர் 29ம் தேதி கொல்கத்தா அணிக்கு எதிரான கடைசி போட்டியில் இவரால் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

You'r reading ஐபிஎல்லில் இருந்தும் ஓய்வு பெற்றார் ஷேன் வாட்சன் சென்னைக்காக விளையாடியதை வாழ்நாளில் மறக்க முடியாது. Originally posted on The Subeditor Tamil

More Ipl league News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை