இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி அடுத்தவர்களின் வேலையில் மூக்கை நுழைக்கிறார் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் தேர்வுக் குழு தலைவருமான திலீப் வெங்சர்க்கார் குற்றம்சாட்டியுள்ளார்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் முடிந்த கையோடு இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காகச் செல்கிறது.
இந்நிலையில் இந்த மூன்று அணிகளிலும் ரோகித் சர்மா சேர்க்கப்படவில்லை. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ரோகித் சர்மாவை அணியில் சேர்க்காததற்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் உள்படப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். ரோகித் சர்மாவை அணியில் சேர்க்காதது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்திருந்தார். மேலும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது குறித்தும் அவர் சில கருத்துக்களைத் தெரிவித்தார்.
இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் தேர்வுக் குழு தலைவருமான திலீப் வெங்சர்க்கார் ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது: கிரிக்கெட்டின் தலைமைப் பொறுப்புக்கு எப்போதும் முன்னாள் வீரர் தான் வரவேண்டும் என்ற கருத்து எனக்கு உண்டு. அதனால் தான் கங்குலி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக நியமிக்கப்பட்ட போது நான் வரவேற்பு தெரிவித்தேன். அவர் திறம்பட பணிபுரிவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனால் இதுவரை அவரது செயல்பாடுகளைப் பார்க்கும்போது எனது எண்ணம் தவறாகிவிட்டதோ எனத் தோன்றுகிறது. அவர் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க முயற்சிக்கிறார். தேவையில்லாமல் அடுத்தவருடைய வேலையில் அவர் மூக்கை நுழைக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் இந்திய அணியில் ரோகித் சர்மாவை ஏன் சேர்க்கவில்லை என்பது குறித்துத் தேர்வுக் குழு தலைவர் சுனில் ஜோதி தான் விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால் அவருக்குப் பதிலாக சவுரவ் கங்குலி சில கருத்துக்களைத் தெரிவித்து இருந்தார். கொரோனா பரவலைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் தற்போது அமீரக நாடுகளில் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் நடத்தப்படும் மைதானங்கள் மற்றும் நேரம் குறித்து சில சர்ச்சைகள் எழுந்த போது கங்குலி தான் சில விளக்கங்களைத் தெரிவித்திருந்தார்.
ஐபிஎல் போட்டிகள் குறித்து கருத்துக்களைக் கூற அதற்காக ஒரு தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தான் பதில் கூற வேண்டும். ஆனால் தேவையில்லாமல் அவரது வேலையிலும் கங்குலி மூக்கை நுழைக்கிறார். அவர் ஒரே சமயத்தில் பலரின் வேலையைச் செய்வது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு வேலையும் செய்ய அதற்குப் பொறுப்பான ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் அவர்கள் தான் அதற்குப் பதில் கூற வேண்டும்.
இவ்வாறு செயல்படுவதன் மூலம் கங்குலி மற்றவர்களின் திறமையைக் குறைத்து மதிப்பிடுகிறார். மற்றவர்களுக்குத் திறமை இல்லை என கங்குலி கூற முயற்சிக்கிறாரா, அல்லது மற்றவர்களை விட எனக்குத் தான் எல்லாம் தெரியும் என அவர் கருதுகிறாரா என்று எனக்குத் தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.