கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலி நீக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த 3-ம் தேதி அன்று டிக் டாக் செயலிக்குத் தடை விதிக்க கோரி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் உயர்நீதிமன்றம் கிளையின் உத்தரவுக்குத் தடைவிதிக்க மறுத்துவிட்டது. மேலும், மத்திய அரசு இதில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியது நீதிமன்றம்.
இதை அடுத்து, டிக் டாக் மொபைல் செயலி மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்களை தொலைகாட்சிகளில் வெளியிட மத்திய அரசு தடை விதித்து. அதை தொடர்ந்து, கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர்களில் இருந்து டிக் டாக் செயலியை நீக்குமாறு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவு, மத்திய அரசின் கோரிக்கைகளை ஏற்று கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலி நீக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட முறையில் டிக் டாக் செயலி குறித்து யாரும் புகார் கொடுக்கவில்லை என்றாலும் இந்திய சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றும் நோக்கில் தங்களுடைய ப்ளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலியை நீக்கியதாகக் கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், ஆப்பிள் தளங்களில் டிக் டாக் செயலி இன்னும் உள்ளது