வாட்ஸ்அப் செயலி மூலம் அனுப்பப்படும் தகவல் மாற்றப்படலாம் என்று 'செக் பாயிண்ட்' ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் செயலியிலுள்ள இக்குறைபாடு குறித்து அந்நிறுவனத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் 'செக் பாயிண்ட்' கூறியுள்ளது.
வாட்ஸ்அப் செயலி மூலம் பரிமாறப்படும் தகவல், அனுப்புவருக்கும், பெறுபவருக்கும் மட்டுமே தெரியும்படி சங்கேத வடிவத்தில் (என்கிரிப்ட்) அனுப்பப்படுவதாகவும், வாட்ஸ்அப் நிறுவனம் கூட அதை பார்க்க இயலாது என்றும் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் குறைபாடுள்ளதாக பரவி வரும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழுவும் மேற்கோளும்
வாட்ஸ்அப் குழுவில் பரிமாறப்படும் ஒரு செய்தியை மேற்கோளாக (quote) கொண்டு, பதில் அல்லது பின்னூட்டம் பதியப்படும்போது, மேற்கோளாக காட்டப்பட்ட செய்தியையும் அனுப்புவரது அடையாளத்தையும் மாற்ற இயலும் என்று கூறப்படுகிறது.
பரிமாறப்பட்ட உண்மை பதிவு அப்படியே இருக்கும். ஆனால், மேற்கோளாக எடுத்தாளப்பட்ட பதிவு மாற்றம் செய்யப்பட்டு தவறான தகவலாக பரவி விடும்.
குழுவும் தனிப்பட்ட செய்தியும்
வாட்ஸ்அப் குழுவில் உள்ள ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் செய்தி ஒன்று அனுப்பப்பட்டு, அந்தச் செய்திக்கு அவர் அளிக்கும் பதிலை அக்குழுவில் உள்ள அனைவரும் பார்க்கத்தக்க வகையில் மாற்றத்தக்க குறைபாடும் உள்ளது.
சந்திக்கு வரும் தனிப்பட்ட பதிவு
இரு வாட்ஸ்அப் பயனர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவலை மற்றவர்கள் பார்க்க இயலாத வகையில் சங்கேத குறியீடாக (என்கிரிப்ட்) மாற்றப்படும். ஆனால், அப்படிப்பட்ட தகவல் பரிமாற்றத்தை மற்றவர்கள் காணும் வகையில் சாதாரண மொழிக்கு மாற்றக்கூடிய குறைபாடும் உள்ளது.
தாங்கள் கண்டுபிடித்த வாட்ஸ்அப் குறைபாடுகளை பற்றிய ஒளிக்கோவை (வீடியோ) விளக்கத்தையும் 'செக் பாயிண்ட்' ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. வாட்ஸ்அப்பில் ஒருவரது அடையாளத்தோடு மற்றவர்கள் செய்தி அனுப்பக்கூடிய குறைபாடும், அனுப்பப்பட்ட செய்தியை அதிகாரப்பூர்வமில்லாமல் மாற்றத்தக்க வசதியும் உள்ளதால், தகவல்களை உறுதி செய்து கொண்டு நம்புவதே நல்லது.