கொரோனா காலம்: கண்களை பாதுகாக்க என்ன செய்யவேண்டும்?

Corona period: What to do to protect the eyes?

by SAM ASIR, Oct 16, 2020, 16:19 PM IST

கொரோனா பாதிப்பின் காரணமாக நாம் வெளியே செல்வது பெரும்பாலும் குறைந்துவிட்டது. ஆகவே, நேரத்தைச் செலவிடத் தொலைக்காட்சியைப் பார்க்கிறோம்; கணினியைப் பார்க்கிறோம். அநேகர் திறன்பேசிகளை (ஸ்மார்ட்போன்) அதிக நேரம் பயன்படுத்துகிறார்கள். இவற்றின் காரணமாகக் கண்கள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

உலக அளவில் பார்வையற்றோரின் எண்ணிக்கை மூன்று கோடிக்கும் அதிகமாகும். அவர்களுள் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் உள்ளனர். இந்தியாவில் 5 கோடிக்கும் மேலானோருக்கு ஓரளவிலிருந்து தீவிரமானது வரையிலான பார்வை பாதிப்பு உள்ளது. பார்வையிழப்பில் 80 சதவீதம் ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் தடுக்கக்கூடியவையே. மருத்துவ வசதி குறைவு, கண்களைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை ஆகியவற்றின் காரணமாகவே பெரும்பாலும் பார்வையிழப்பு நேருகிறது.

அதிக நேரம் எலெக்ட்ரானிக் திரைகளைப் பார்க்கும் வழக்கமும் (screen-time) பார்வையைப் பாதிக்கக்கூடும். எல்லா வயதினருக்குமே இதன் மூலம் பாதிப்பு நேரக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.20-20-20 விதி கணினியைப் பார்ப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. வீட்டிலிருந்து வேலை செய்யும்போது அதிக நேரம் மேசை அல்லது மடிக்கணினி முன் உட்கார்ந்திருக்க நேரிடுகிறது. அவற்றை நாம் பயன்படுத்தாமல் இருக்க இயலாது. ஆனால் கணினியைப் பயன்படுத்தும்போது 20 நிமிட நேரத்திற்குப் பிறகு 20 நொடிகள் 20 அடி தொலைவிலுள்ள பொருள்களைப் பார்த்துவிட்டு பின்னர் கணினியில் வேலையைத் தொடரலாம். இது கண்கள் பாதிக்கப்படும் அபாயத்தைக் குறைக்கும்.

கணினித் திரையைப் பார்க்கும்போது எழுத்துருக்களின் (font) அளவை பெரிதுபடுத்திப் பயன்படுத்தினால் திரையை மிகவும் நெருங்கிச் சென்று கண்களைச் சுருக்கிப் பார்க்கவேண்டிய கட்டாயம் எழாது. உங்கள் கணினியின் திரையை அவ்வப்போது நன்கு சுத்தமாகத் துடைத்துக் கொள்வதும் கண்களுக்குச் சிரமத்தைக் குறைக்கும்.

கண்ணுக்குள் ஈரம்

கண்கள் வறட்சியடைவது உறுத்தலைக் கொடுக்கும். கண்களை வறளுவதற்காக அனுமதிப்பது நாளடைவில் கண்ணுக்குக் கெடுதலை உருவாக்கும். நாளுக்கு நாள் மாசுபடுதல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அடிக்கடி கண்களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும். கண்களை சிமிட்டுவதும் கண்களுக்கு ஈரப்பதத்தை அளிக்கும். அது வறட்சியையும் உறுத்தலையும் குறைக்கும். கண்களில் வறட்சி அதிகமாக இருந்தால் கண் மருத்துவர் அதற்கென சொட்டு மருந்தினை பரிந்துரைப்பார்.

சத்துள்ள உணவு

பசலை, பிரௌகோலி போன்ற கீரைகள், காய்கறிகளைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது கண்புரை ஏற்படுவதைத் தடுக்கும். கீரைகள், காய்கறிகளில் லுடெய்ன் (Lutein) மற்றும் ஸீஸான்தின் (zeaxanthin) போன்ற சத்துகள் உண்டு. இவை கண்புரையைத் தடுக்கக்கூடியவை. வைட்டமின்கள் சி மற்றும் இ மற்றும் துத்தநாகம் (ஸிங்க்) போன்ற சத்துகள் முதுமையின் காரணமாகக் கண்களில் வரக்கூடிய குறைபாடுகளைத் தடுக்கும். லுடெய்ன் (Lutein), கண்களுக்கு ஊறு விளைக்கக்கூடிய புற ஊதா கதிர்களைத் தடுக்கக்கூடிய நிறமிகளின் வளர்ச்சியைத் தூண்டும். சூரிய ஒளியினால் ஏற்படக்கூடிய சேதத்தைத் தடுக்கக்கூடிய ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் என்னும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் உள்ள முட்டையின் மஞ்சள் கரு, பூசணி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்றவற்றைச் சாப்பிடவேண்டும்.

சரியான கண்ணாடிகள்

வீட்டுக்கு வெளியே சூரிய ஒளியில் செல்லும்போது புற ஊதா (UV) கதிர்களிலிருந்து நூறு சதவீதம் பாதுகாப்பளிக்கக்கூடிய குளிர் கண்ணாடிகளை அணிந்து கொள்ள வேண்டும். நல்ல தரமான கண்ணாடிகளை மருத்துவரின் பரிந்துரையோடு அணிந்துகொள்வது நலம்.

அதிகமான நேரம் கணினி மற்றும் மடிக்கணினி (லேப்டாப்) பயன்படுத்துவோர் அதற்கென்று பிரத்யேகமான (anti-reflection) கண்ணாடிகளைப் பயன்படுத்தவேண்டும். அக்கண்ணாடிகள் நமக்குத் தீங்கு இழைக்காத கதிர்களை மட்டுமே கண்களுக்குள் அனுமதிக்கும்.

மருத்துவ பரிசோதனை

ஆண்டுக்கு ஒருமுறையாவது தகுதி வாய்ந்த கண் மருத்துவரிடம் கண்களைப் பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

திடீரென்று கண்களில் அடிபடுதல், நீரிழிவு, கண் புரை மற்றும் குளூக்கோமா என்னும் கண்ணுக்குள் ஏற்படும் அழுத்தம் காரணமான நோய் போன்றவையே பெரும்பாலும் பார்வையிழப்புக்குக் காரணமாகின்றன. ஆகவே, இவற்றுக்கு எச்சரிக்கையுடன் இருப்பது நலம்.

You'r reading கொரோனா காலம்: கண்களை பாதுகாக்க என்ன செய்யவேண்டும்? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை