வாட்ஸ் அப் இல் நமக்கு வரும் அல்லது நாம் அனுப்பும் தகவல்கள் ஒரு வாரத்தில் தானாகவே அழிந்து விடும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் நேற்று அமல்படுத்தி உள்ளது. இந்த மாதத்தின் இறுதிக்குள் அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும் என வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது.சுமார் 200 கோடிக்கும் அதிகமான பயனர்களுக்கு இந்த வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்க உள்ளது. இந்த வசதி யை எல்லா வித ஆண்ட்ராய்ட், ஐபோன் மற்றும் லினக்ஸ் சார்ந்த சாதனங்களிலும் பெறமுடியும்.
இந்த அம்சம் தனிப்பட்ட மற்றும் குரூப் பதிவுகளுக்கும் கிடைக்கிறது. இருப்பினும், குரூப் அரட்டைகளில், குரூப் அட்மின்கள் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த முடியும் .இந்த வசதியைத் தேவைப்படும்போது நீக்கிக் கொள்ளவும் முடியும். வாட்ஸ்அப் பக்கத்தின் வலது மூலையில் உள்ள மூன்று கோடுகளை கிளிக் செய்து செட்டிங்ஸ் பகுதியில் சாட் என்ற பிரிவுக்குச் சென்று இதனைச் செயல்படுத்தலாம்.
இதன்பின் தனிநபர் அல்லது குரூப்பில் அனுப்பப்படும் புதிய செய்திகள் ஏழு நாட்களுக்குப் பிறகு தானாகவே மறைந்துவிடும்.இந்த வசதியை நமது போனில் செயல்படுத்தும் முன் நமக்கு வந்த அல்லது நாம் அனுப்பிய பதிவுகளை இது எந்த விதத்திலும் பாதிக்காது.சிலர் வாட்ஸ்அப் பதிவுகளை பேக்கப் செய்து வைத்திருப்பார்கள். அப்படி வைத்திருந்தால் தானாக அழியும் வசதி அதில் இயங்காது.
பொதுவாக வாட்ஸ்அப்பில் வரும் தகவல்களால் நமது செல்போனில் நினைவகம் (memory) நிரம்பிவிடும். இதன் காரணமாகப் பலரது செல்போன்கள் மிக மெதுவாக இயங்கும்.
இதைத் தவிர்க்க சில செட்டிங்ஸ் கள் மூலம் வாட்ஸ் அப் தகவல்கள் நினைவகத்தில் சேருவதைத் தடுக்க முடியும். இருப்பினும் பலருக்கு இந்த வசதியை பயன்படுத்தத் தெரியாததால் தானாகவே மறையும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.