ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தனது தந்தை வழியில் உள்துறை அமைச்சராக ஒரு பெண்ணுக்கு வாய்ப்பளித்துள்ளார்.
ஒருங்கிணைந்த ஆந்திராவில் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி முதலமைச்சராக இருந்த போது, முதல் முறையாக ஒரு பெண்ணை அம்மாநில உள்துறை அமைச்சராக நியமித்தார். சபீதா இந்திரா ரெட்டி என்ற அந்த முன்னாள் உள்துறை அமைச்சர் தற்போது தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
தற்போது ஆந்திராவில் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி, நாட்டிலேயே முதல் முறையாக 5 துணை முதல்வர்களை நியமித்துள்ளார். மேலும், தனது தந்தை வழியில் பெண் உள்துறை அமைச்சரை நியமித்திருக்கிறார்.
பிரதிப்பாடு(தனி) தொகுதி எம்.எல்.ஏ.வான மேகதோடி சுஜரிதா, தலித் பெண். இவருக்குத்தான் உள்துறை அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது.
இவரைத் தவிர மேலும் 2 பெண்கள் ஜெகன் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் பழங்குடியினர் நலன் துறையை கவனிக்கும் புஷ்பாஸ்ரீ வாணி துணை முதல்வராகவும் இருக்கிறார். இன்னொரு பெண் அமைச்சர் தானேட்டி வனிதாவுக்கு பெண்கள் மேம்பாட்டு துறை அளிக்கப்பட்டுள்ளது.