திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நில அபகரிப்பு மற்றும் காலரா தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாகக் கூற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக மூன்று அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்குகள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கோரியும் ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
அதே சமயம் ஸ்டாலின் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க மறுத்த நீதிபதி, 2 வாரங்களில் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி 5000ரூபாய்க்கான பிணை செலுத்தி, உயர் நீதிமன்றத்தில் மனு தள்ளுபடியானால் எந்த சம்மனுமின்றி ஆஜராவதாக உத்தரவாதம் அளித்து விலக்கு பெற்று கொள்ளலாம் எனக் கூறினார்.