தமிழக- கேரளா எல்லையில் கொரில்லா தாக்குதல் நடத்த இடம் தேர்வு செய்ய வந்த போது, மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கேரள மாநிலம் வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு அட்டப்பாடி ஆகிய வனப்பகுதிகளில் மாவோயிஸ்டு நடமாட்டம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. அந்த அடர்ந்த வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளில் ஈடுபடுவதாகவும் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
மேலும், வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களிடம் அதிகம் பழகும் மாவோயிஸ்ட்கள் காவல்நிலையம், அரசு அலுவலகங்கள், வாகனங்கள் மற்றும் வன ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியும் வருகின்றனர். இதனால் இரு மாநில எல்லை பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அட்டப்பாடி அகழி பகுதியில் மாவோயிஸ்ட் டேனியல் சுற்றித்திரிவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் மாவோயிஸ்ட்டை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பாலக்காடு பகுதியில் வைத்து மாவோயிஸ்ட் டேனியஸிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில், கொரில்லா தாக்குதல் நடத்த இடம் தேர்வு செய்ய வந்த போது சிக்கினார் என தெரியவந்துள்ளது. அத்துடன் அந்த நபர் கொரில்லா தாக்குதலில் சிறப்பு பயிற்சி பெற்றவர் என காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.