திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் பெற புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் பக்தர்களிடம் ஆலோசனைகள் , கருத்துக்கள், புகார்களை கேட்கும் டயல் யுவர் இ.ஓ. நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் பேசிய அவர், கடந்த மாதம் நடந்த வருடாந்திர பிரம்மோத்சவத்தின் போது நான்கு மாடவீதியில் இருபுறமும் விரிவாக்கம் செய்யப்பட்ட கேலரியில் இருந்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ததாகக் கூறினார்.
"ஆன்லைன் மூலமாக ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் பெற பக்தர்களுக்காக புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். இதன்மூலம் ஒரு செல் போன் நம்பர் மூலமாக இரண்டு சேவை டிக்கெட்டுகள் மட்டுமே பெற முடியும். ஆதார் கார்டு பார்கோடிங் மூலமாக டிக்கெட்டுகளை சோதனை செய்யும் முறையை கொண்டுவரப்பட்டுள்ளது."
"கடந்த பிரம்மோற்சவத்தின்போது தரிசனத்திற்கு எப்படி அனுமதிக்கப்பட்டதோ அதே போல் 10 தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் போதும் மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள், ஒரு வயது குழந்தையுடன் பெற்றோர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கும் சிறப்பு தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது."
"திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நடைபெறக்கூடிய ஆர்ஜீத சேவை டிக்கெட்டுகளும் ஆன்லைன் மூலமாக பக்தர்கள் முன்பதிவு செய்து பெறலாம். மேலும் 50 சதவீதம் டிக்கெட்டுகளை நேரடியாக வந்தும் பெற்று கொள்ளலாம்." என அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.