இளைஞரணி வளர துணை நின்றவர் பரிதி இளம்வழுதி- ஸ்டாலின் இரங்கல்

Parithi ilamvazhuthi passes away mk stalin Mourning

by Manjula, Oct 13, 2018, 10:49 AM IST

கருணாநிதியின் செல்லப்பிள்ளையாக இருந்த பரிதி இளம்வழுதி மறைந்தது மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என்று திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சராக இருந்த பரிதி இளம்வழுதி இன்று அதிகாலை உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவரது பெசன்ட் நகர் இலத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பரிதி இளம்வழுதி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், பரிதி இளம்வழுதியின் மறைவு மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

திமுக இளைஞரணி வளர்வதற்கு என்னுடன் இருந்து துணை நின்றவர். சிறுவயதிலேயே கழகத்தில் இணைந்த அவர், என்னுடன் நெருங்கி பழகினார். திமுக சார்பில் எடுக்கப்பட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்து என்னுடன் பல முறை சிறை சென்றவர். திமுக சார்பில் போட்டியிட்டு 6 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பரிதி இளம்வழுதி, தொகுதி மக்களிடம் நற்பெயரை பெற்றார். சட்டமன்றத்தில் தன்னந்தனியாக ஆளுங்கட்சிகளை எதிர்த்து குரல் கொடுக்கும் வல்லமை அவரிடம் இருந்தது.

திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியால் இந்திரஜித், வீர அபிமன்யு என்று பாராட்டுக்களை பெற்ற பரிதி இளம்வழுதி, சட்டமன்ற துணை சபாநாயகராகவும் செய்தி விளம்பர துறை அமைச்சராகவும் பொறுப்புகளை வகித்துள்ளார். அரசியல் சூழ்நிலை காரணமாக குடும்ப சூழ்நிலை காரணமாக தடுமாறும் போது பரிதி இளம்வழுதியை கருணாநிதி தாங்கிப்பிடித்தார். திமுக தலைவர் கருணாநிதிக்கு அவர் ஒரு செல்லப்பிள்ளை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

You'r reading இளைஞரணி வளர துணை நின்றவர் பரிதி இளம்வழுதி- ஸ்டாலின் இரங்கல் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை