நாடாளுமன்றத் தேர்தலில் தமிழிசையை ஓரம்கட்டும் வேலையை தாமரைக் கட்சி கோஷ்டிகள் தொடங்கிவிட்டார்கள். அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 5 இடங்களில் யாருக்கெல்லாம் சீட் கிடைக்கும் என கமலாலயத்தில் பெரும் மோதலே வெடித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக ஹெச்.ராஜா பேசி வரும் வெறுப்பு பேச்சுக்களால் கூட்டணியின் வெற்றியும் பாதிக்கும் என்பதால், அவரை ஓரம்கட்டும் வேலையை தமிழிசை தரப்பு செய்து வருகிறது.
இதற்குப் பதிலடியாக, தமிழிசைக்கு சீட் கொடுத்தால் அந்த ஒரு தொகுதியிலும் பாஜக தோற்கும். கட்சிக்காரர்கள் யாரையும் அவர் அரவணைத்துச் செல்வதில்லை. சீனியர்களிடம் ஆலோசனை கேட்பதில்லை என டெல்லிக்குப் புகார் மனுக்களைத் தட்டி வருகின்றனர்.
இதனால் கொதித்த தமிழிசை, யாருக்கு எங்கே சீட் என ஒதுக்கப் போவது நான்தான். மொட்டைப் புகார்களை தட்டி விடுகிறவர்கள் யாரெனத் தெரியும். அவர்களுக்கு நேரம் வரும்போது யார் எனக் காட்டுகிறேன் என ஆவேசப்பட்டிருக்கிறார்.
இதைப் பற்றி டெல்லியில் பேசியபோதும், எனக்கே சீட் கிடையாது என ஒரு குரூப் மீடியாக்களில் செய்தியை வெளியிட வைக்கிறது. எனக்கு எதிராகத் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறார்கள் எனக் கண்ணீர் விட்டாராம்.
அருள் திலீபன்