அதிமுக கூட்டணிக்குள் விஜயகாந்தைக் கொண்டு வரும் வேலைகளைத் துரிதப்படுத்தியிருக்கிறார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் வன்னியர் வேட்பாளர்களை நிறுத்தவிடாமல் தேமுதிகவுக்கு எதிரான வேலைகளைச் செய்தது பாமக.
அதனால் போட்டியிட்ட 14 தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது தேமுதிக. இந்தமுறையும் பாமக அங்கம் வகிக்கும் அணியில் தேமுதிக இடம் பெறும் வாய்ப்பு உருவாகியிருப்பதால், பிரேமலதா கவனத்துக்குச் சில தகவல்களைக் கொண்டு சென்றுள்ளனர் அரசியல் வல்லுநர்கள் சிலர்.
அவர்கள் அனுப்பியுள்ள தகவலில், ' அதிமுக அணியில் உங்கள் செல்வாக்குக்கு ஏற்ற இடங்களைப் பெறுவதில் எச்சரிக்கையாக இருக்கவும். இந்தமுறை தருமபுரி தொகுதி பாமகவுக்குப் போவதால், நீங்கள் கிருஷ்ணகிரி தொகுதியை மறக்காமல் கேட்டு வாங்குங்கள்.
அங்கு சிறுபான்மையினர் வாக்குகள் குறைவாகவும் தெலுங்கு, கன்னடம் என மொழிவழி சிறுபான்மை வாக்குகள் குறிப்பிடத்தகுந்த அளவு உள்ளன. இந்துத்துவ வாக்குகளும் கணிசமாக உள்ளன.
உறுதியாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் பெறும் தொகுதிகளில் இருக்கும் சாதி, மத வாக்குகளுக்கு ஏற்ப முடிவெடுங்கள். கடந்த தேர்தல்களைப் போல நீங்கள் வலுவாக இருக்கும் தொகுதிகளை விட்டுக் கொடுத்துவிட வேண்டாம்.
நீங்கள் பா.ஜ.க மூலமாக அதிமுக கூட்டணிக்குள் வருகிறீர்கள். ஆனால், பாமகவோ எடப்பாடி மூலமாக உள்ளே வருகிறார்கள். இந்தமுறையும் பாமக விஷயத்தில் கவனமாக இருங்கள்' எனத் தகவல் அனுப்பியுள்ளனர்.
எழில் பிரதீபன்