மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. அதற்குள் கூட்டணிப் பேச்சுக்களைவிட தங்களுக்கான தொகுதிகளை ரிசர்வ் செய்து கொள்வதில் சிட்டிங் எம்பிக்களும் தலைவர்களின் வாரிசுகளும் தயாராகி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்துடன் மோதல் போக்கைக் கடைபிடித்து வந்த மாறன் சகோதரர்கள், தற்போது ராசியாகிவிட்டனர். மீண்டும் மத்திய சென்னையில் போட்டியிடுவதற்குத் தயாராகி வருகிறார் தயாநிதி மாறன்.
இதைப் பற்றிப் பேசும் கட்சிக்காரர்கள், கருணாநிதி இருந்தவரையில் மாறன் குடும்பத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வந்தார். 2ஜி விவகாரத்துக்குப் பிறகு மாறன் குடும்பத்தோடு கருணாநிதி குடும்பம் கடுமையாக மோதி வந்தது.
கனிமொழி தரப்பிலும் மாறன் குடும்பத்தின் மீது பகையைக் காட்டி வந்தனர். ஒருகட்டத்தில், இதயம் இனித்தது, கண்கள் பனித்தது எனக் கூறி மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தார் கருணாநிதி.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக ஸ்டாலினோடு முரண்பட்டு நின்றார் தயாநிதி. சர்கார், பேட்ட என நடிகர்கள் விஜய், ரஜினி ஆகியோரை வளர்த்துவிடும் வேலைகளைச் செய்து வந்தனர்.
இதனால் கடும் கோபத்தில் இருந்தார் ஸ்டாலின். இதன் விளைவாக மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி போட்டியிட மாட்டார் எனக் கட்சிக்காரர்களே பேசி வந்தனர். அதற்கு எதிர்மறையாக மத்திய சென்னையில் தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டார் தயாநிதி.
இதைப் பற்றிப் பேசும் திமுகவினர், தேர்தல் நெருக்கத்தில் ஊடகத்தைத் துணைக்கு வைத்துக் கொண்டு திமுகவை நெருக்கும் வேலைகளைச் செய்யத் திட்டமிட்டது மாறன் குடும்பம். மறுபுறம் ஸ்டாலினிடம் சமாதானத் தூது வேலைகளையும் நடத்தினர்.
குடும்ப உறுப்பினர்கள் அமர்ந்து பேசியதில் மோதல் முடிவுக்கு வந்துவிட்டது. மத்திய சென்னையின் வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கிறார் தயாநிதி' என்கிறார்கள் உறுதியாக.
அருள் திலீபன்