திமுக தலைவர் கருணாநிதி அவரது கொள்ளுப்பேரனுடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ இளையத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோகாட்சி பார்ப்பவர்களை நெகிழச்செய்துள்ளது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வசித்து வருகிறார். அவரது வயது முதிர்வு காரணமாக சளி தொந்தரவு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட காரணத்தால் அவர் அரசியலில் இருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார்.
மூச்சு திணறல் பிரச்னையால் அவருக்கு தொண்டையில் டியூப் பொருத்தப்பட்டு இருந்தது. தற்போது அவர் உடல் நிலை தேறிவரும் நிலையில், தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள டியூப் எடுக்கப்படும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனால், கருணாநிதியை உற்சாகப்படுத்த அவ்வப்போது அவரது மகள் மற்றும் மகன்கள் வெளியே அழைத்து செல்வது, பழைய நினைவுகள் குறித்து உரையாடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், சமீபத்தில் கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசுவின் மகனான அருள்நிதியின் மகன் மகிளனை (2) அவரிடம் அழைத்து சென்று விளையாட வைத்த வீடியோ காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவை மு.க.தமிழரசு வெளியிட்டுள்ளார்.
கருணாநிதி அவர்கள் நாள்காலியில் அமர்ந்தபடி பந்து வீச அதை கிரிக்கெட் மட்டையால் கொள்ளுப்பேரன் அடித்து மகிழ.. இந்த காட்சி அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 2 வயது குழந்தையும் 93 வயதில் குழந்தை மனநிலையில் உள்ள கருணாநிதியும் கிரிக்கெட் விளையாடும் காட்சி இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.