ஸ்டீபன் ஹாக்கிங்... வீல் சேரில் அமர்ந்தே அறிவியல் உலகை ஆட்சி செய்த விஞ்ஞானியின் கதை!

ஸ்டீபன் ஹாக்கிங்... வீல் சேரில் அமர்ந்தே அறிவியல் உலகை ஆட்சி செய்த விஞ்ஞானி

Mar 14, 2018, 13:43 PM IST

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங். இவர் ஜனவரி 8, 1942-ல் இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்ஃபோர்டில் பிறந்தார். இவருக்கு 21 வயது இருக்கும்போது மோட்டார் நியூரான் நரம்பியல் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் இவரது கழுத்திற்கு கீழே உள்ள பகுதி முழுக்க வேலை செய்யாமல் போனது. மொத்தமாக வீல் சேரில் முடங்கினார். அவரது ஆயுள் காலம் சில காலமே என்று டாக்டர்கள் கூறி விட்டனர். ஆனால் அதை ஹாக்கிங் முறியடித்தார். ஓராண்டு ஈராண்டல்ல... ஐம்பதாண்டு காலம் சக்கர நாற்காலியில் இருந்தபடியே பல சாதனைகளை படைத்தார்.

நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் இவர் சாதனைகளில் இறங்கினார். இவரது கண் அசைவுகளை வைத்து என்ன பேசுகிறார் என்று கண்டுபிடிக்க சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டு அதுவே அவரது குரலாக மாறியது. இவர் செய்த ஆராய்ச்சி முடிவுகள் எல்லாம் இப்படித்தான் வெளியாயின. இவர் குவாண்டம் அறிவியல், அணுக்கரு அறிவியல் துறைகளில் முக்கிய பங்களிப்பை ஆற்றியுள்ளார்.

ஆய்வுகள்:- 1965-66-ம் ஆண்டுகளில் தன் 24-ம் வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பு பயின்று வந்தபோது 134 பக்கங்கள் கொண்ட ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை எழுதினார். “விரிவடையும் பேரண்டத்தின் பண்புகள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அது, நம் அண்டத்தின் மீது நமக்கு அப்போதிருந்த அறிவை மேலும் அதிகமாக்கியது. விடையில்லா பல கேள்விகளுக்கு விடைகள் கிடைத்தன. இந்த ஆராய்ச்சிக் கட்டுரையின் மேலும் ஒரு சிறப்பு அம்சம், இது முழுக்க முழுக்க தட்டச்சு செய்யப்பட்ட ஒரு புத்தகம். 1966-ல் ஆண்டில் எழுதப்பட்டதால், அப்போது தட்டச்சில் பல கணிதக் குறியீடுகள் கிடையாது. எனவே, அவை மட்டும் தேவையான இடத்தில் கைகளால் எழுதப்பட்டிருக்கும்.

கடந்த செப்டம்பர் மாதம் வரை, இந்த ஆய்வறிக்கையை நகல் எடுக்க ஒரு மாணவன் 65 பவுண்டுகள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்திற்கு கட்டணமாக செலுத்த வேண்டிய நிலை இருந்தது. “என்னுடைய ஆராய்ச்சிகள் மட்டுமல்லாது, அனைவரின் ஆராய்ச்சிகளும் இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் இலவசமாக, தடையின்றி படித்துக்கொள்ளும் வசதி செய்து தரப்பட வேண்டும்.” என ஹாக்கிங் கூறியதை அடுத்து, தற்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இதை இலவசமாகப் படித்துக்கொள்ள, தரவிறக்கம் செய்ய அனுமதியளித்துள்ளது.

1986-ல் அமெரிக்காவில் உள்ள அனென்பெர்க் அறக்கட்டளை, இயற்பியல் கணிதத்தை மாணவர்களுக்குப் எளிய நடையில் புதிய கோணத்தில் வடிவமைப்பவர்களுக்கு 6 மில்லியன் டாலர் பரிசு என அறிவித்தது. இந்தச் சவாலை ஏற்று, அரை மணி நேரத்திற்கு ஒரு காட்சி விளக்கமும், 26 மணி நேரம் ஓடக் கூடிய ‘காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ என்ற பாடத் திட்டத்தையும் உருவாக்கிக் கொடுத்து பரிசையும் பெற்றார் ஹாக்கிங்.

இந்த சிறந்த படைப்பு 2000-ல் உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையால் ஒரு கோடி ரூபாய் செலவில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இவர் எழுதிய அறிவியல் நூல்களான A Brief History of Time (காலத்தின் ஒரு சுருக்க வரலாறு), The Universe in a Nutshell ஆகிய இரண்டும், உலகம் முழுவதும் மிகப் பிரபலமாக விற்பனையாகி சாதனை படைத்தன. சாதாரண மக்களும் வாசித்துப் பயனடையும் வகையில் இலகுவான மொழியில், அறிவியல் சமன்பாடுகளைத் தவிர்த்து எழுதப்பட்டிருந்ததால் இந்நூல்கள் பலரையும் கவர்ந்தன. இதுபோல் எண்ணற்ற பல ஆய்வுகளை மேற்கொண்ட அவர், தன் வாழ்நாள் முழுவதையும் ஆராய்சிக்கே செலவழித்து, இதுவரை 18 விருதுகளை வாங்கி குவித்துள்ளார். மேலும், தமது பெயரைக் காப்புரிமை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஓர் சக்கர நாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம். இன்றைய இளைய சமுதாயத்தினர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய நபர் ஸ்டீபன் ஹாக்கிங். ஊனம் ஒரு தடையல்ல என்பதை நிரூபித்து வாழ்ந்து காட்டிய அதிசயிக்க வைக்கும் அறிய அறிவியலாளர். இன்றைய உலகின் அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு முதல் எடுத்துக்காட்டு இவர்தான். அனைத்து மாணவ, மாணவிகளும், வெற்றி பெற துடிக்கும் இளைஞர்களும் அவசியம் இவரை படிக்க வேண்டும். குறிப்பாக ஆரோக்கியமான உடல் உறுப்புகளை பெற்ற சோம்பேறிகள் இவரை அறிந்து கொள்வது நலம்.

ஹாக்கிங்கின் வினோத நம்பிக்கைகள்:-

இவர் ஒரு கடவுள் மறுப்பு கொள்கை உடையவர், இந்த உலகை கடவுள் என்ற ஒருவர் படைத்திருக்க வாய்ப்பில்லை என்று உறுதியாக நம்பினார். கடவுள், மறுபிறவி, சொர்க்கம், நரகம் குறித்த அவரது புரிதல் பெரியார் போன்று சிந்தனைப் பூர்வமானது மட்டுமின்றி, அறிவியல் பூர்வமுமானது. நாம் இறந்த பின்னர் என்ன ஆவோம், எங்கு போவோம், நமது உயிர் என்னாகும், பேய்கள் உண்டா...??? இதற்கெல்லாம் விடை தெரியாமல் நாம் குழம்பியிருக்கும் நேரத்தில், "இதில் எதுவுமே கிடையாது. இறப்போடு எல்லாம் முடிந்து போய் விடும். மனித மூளையும் ஒரு கம்ப்யூட்டர் போலத்தான், எப்படி கம்ப்யூட்டரில் உள்ள சாதனங்கள் செயலிழந்தால் கம்ப்யூட்டரும் செயலிழந்து போகுமோ அதுபோலத்தான் மூளையும், மூளை செயலிழந்து விட்டால் அவ்வளவுதான், அனைத்தும் முடிந்து விடும். அதன் பிறகு எதுவுமே இல்லை, மரணம்தான் இறுதியானது, சொர்க்கமும் கிடையாது, நரகமும் கிடையாது, மறுபிறவியும் கிடையாது.

மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை என்பது கற்பனையானது, அவைகள் கட்டுக்கதைகள், அவை மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள்" என அடித்துக் கூறியவர் ஸ்டீபன் ஹாக்கிங். இதுகுறித்து தனது The Grand Design என்ற நூலிலும் விரிவாகப் பேசியுள்ளார். இவர் ஏலியன்கள் மீது அதிக நம்பிக்கை கொண்டவர், கண்டிப்பாக ஒருநாள் இந்த பிரபஞ்சத்தில் எங்காவது ஓரிடத்தில் வேற்றுகிரக உயிர்கள் வாழும், ஆனால் அவர்கள் நம்மை சந்திப்பார்களா என்பது மட்டும் சந்தேகம் என்று வித்தியாசமான நம்பிக்கையுடன் வாழ்ந்தார். அதபோல் டைம் டிராவலுக்கும் பல விளக்கங்கள் கொடுத்துள்ளார், எதிர்காலத்தில் ஒளியை விட வேகமாக மக்கள் பயணம் செய்வார்கள், அப்போது டைம் மெஷின் டிராவல் சாத்தியம் என்று குறிப்பிட்டார். ஒருவேளை டைம் டிராவல் சாத்தியமானால் "நாம் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் சென்று, திருமணம் ஆகாத வயதில் வாழும் நமது தாத்தாவை கொலை செய்துவிட்டோம் என்றால், நாம் மறுபடி திரும்பி இதே வருடத்திற்குள் வர முடியுமா.?" என்பது போன்ற பல சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது என்பதால், டைம் மெஷின் ஆராய்ச்சியில் அவர் இறங்கவில்லை.

ஹாக்கிங்ஸின் எச்சரிக்கை:-

புவி தொடர்ந்து வெப்பமயமாகிக் கொண்டே இருக்கிறது என்றும், இதே நிலை நீடித்தால், இன்னும் 600 ஆண்டுகளில் அதாவது 2600 ஆம் ஆண்டுக்குள் பூமி நெருப்பு பந்தாக மாறிவிடும். இதன் காரணமாக இன்னும் 100 ஆண்டுகளில் புவியில் வாழும் உயிரினங்கள், தாவரங்கள் முதற்கொண்டு எந்த உயரினமும் வாழ முடியாத சூழல் உருவாகும் என்றும், அதனால் இன்னும் நூறு ஆண்டுக்குள் மனிதன் வாழ தகுதியான இன்னொரு உலகத்தை கண்டுபிடித்து அங்கே சென்று விடுவது நலம் என எச்சரிப்பு விடுத்தார்.

இல்லறம் முதல் இறுதி வரை:-

ஹாக்கிங் 1965-ல் தனது தோழியை காதலித்து திருமணம் செய்து அவருடன் 30 ஆண்டுகள் வாழ்ந்தார், பின்னர் விவாகரத்து பெற்று, தன்னை பராமரித்து வந்த செவிலியரை திருமணம் செய்து அடுத்த பத்தாண்டுகள் வாழ்ந்தார். கடைசி பத்தாண்டுகள் வாழ்க்கை துணையின்றி வாழ்ந்து வந்தார். தனது இறுதி காலத்தில் கூட, வீட்டில் முடங்கிக் கிடக்காமல், சில ஆராய்சிகளில் ஈடுபட்டுக் கொண்டே, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார். இத்தகைய அறிவியல் விஞ்ஞானிகளின் மரணம் உலகத்திற்கு மட்டுமல்ல பேரண்டத்திற்கே பேரிழப்பாகவே கருதப்படுகிறது.

இதையும் படிச்சிருங்க - அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் காலமானார்!

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஸ்டீபன் ஹாக்கிங்... வீல் சேரில் அமர்ந்தே அறிவியல் உலகை ஆட்சி செய்த விஞ்ஞானியின் கதை! Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை