மத்திய அரசின் ஜீரோ டிபெக்ட், ஜீரோ எபெக்ட் சான்றிதழ் திட்டத்தை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் தனது 12 வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் இந்த திட்டத்தை 491 கோடி நிதி ஒதுக்கீட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகச் சந்தையோடு போட்டி போடும் அளவுக்கு இந்தியாவில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்திப் பொருட்களைத் தரம் உயர்த்துவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்களுடைய உற்பத்தி பொருட்களை நல்ல தரத்தோடு உற்பத்தி செய்து சந்தைக்கு அனுப்புவது உறுதி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்பட்டு சந்தைக்கு அனுப்பப்படும் பொருட்களில் ஏதேனும் குறை என்று கூறி சந்தையிலிருந்து திரும்பி வராத அளவுக்கு அதனுடைய தரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அதோடு இதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து கார்பன் வெளிப்பாட்டைக் குறைப்பது, மற்றும், திறமையான தொழிலாளர்களை உருவாக்குவது, இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.
இதற்காக மத்திய அரசு சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களை ஆய்வு மற்றும் மதிப்பீடு செய்து அந்த நிறுவனத்திற்கு இஜட்.இ.டி. மார்க் (ZED Mark) என்ற முத்திரையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் நிறுவனங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது.
பதிவு செய்யும் முறை
இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அத்திட்டத்தின் கீழ் பயனடைய பதிவு செய்ய வேண்டியது அவசியமாகின்றது.
www.zed.org.in என்ற இணைய தளத்தினைப் பார்வையிட்டு செல்போன் எண் மற்றும் இ-மெயில் முகவரியுடன் அதில் தங்களுடைய நிறுவனங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
தங்களுடைய நிறுவனம் இயங்குகிறதா என தாங்களாகவே தங்களுடைய நிறுவனத்தை மதிப்பீடு செய்ய வேண்டும்.
சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அதிகாரிகள் நேரடியாகப் பார்த்து மதிப்பீடு செய்வார்கள். அதன் பிறகு ஒரு ஆலோசகரைத் தேர்வு செய்து அந்த நிறுவனத்தை பகுப்பாய்வு செய்து கொள்ளலாம்.
இந்த சான்றிதழை பெறுவதற்கான செலவும் மத்திய அரசு வழங்கும் மானியத்திலேயே அடங்குகிறது. அதனால் இத்திட்டத்தின் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களைப் பதிவு செய்து பயனடையலாம்.
மேலும் இந்த அமைப்பின் மூலம் பெறப்படும் சான்றிதழ் 4 ஆண்டு காலம் வரை செல்லத்தக்கது.
இந்த திட்டமானது Make in India திட்டத்திற்கு உறுதுணையாகவும் உருவாக்கப்பட்டது.
மேலும் தகவல்களுக்கு : www.zed.org.in இணையதளத்தைப் பார்வையிடலாம்.