நாட்டின் பெரும்பாலான ஊரகப் பகுதிகள் தனித்தனி குடியிருப்புப் பகுதிகளாக இல்லாமல் ஒன்றோடு ஒன்று நெருங்கி அமைந்திருக்கும் கூட்டுப் பகுதிகளாக உள்ளன. வளர்ச்சியடைவதற்கான ஆற்றலை இவை கொண்டிருக்கின்றன. பொருளாதார ஊக்கம் இருக்கிறது. போட்டிப்போடும் வாய்ப்புகளையும் பெற்றுள்ளன. இத்தகைய கூட்டுப் பகுதிகள் வளர்ச்சி கண்டுவிட்டால் அவை RURBAN (ஊரக நகர்ப்புறம்) என்று வகைப்படுத்தப்படுகின்றன. இதைக் கவனத்தில் கொண்டு, சியாமா பிரசாத் முகர்ஜி ஊரக நகர்ப்புறத் திட்டம் (SPMRM) என்ற திட்டத்தை இந்திய அரசாங்கம் தொடங்கியிருக்கிறது. இத்தகைய பகுதிகளுக்குப் பொருளாதார, சமூக, நிலவியல் கட்டமைப்பு வசதிகளை அளித்து அவற்றை மேம்படுத்துவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 21 முதல் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
300 ஊரக நகர்ப்புறக் கூட்டுப் பகுதிகளை அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேம்படுத்தும் நோக்கத்தை இந்தத் திட்டம் கொண்டுள்ளது. தேவைப்படும் வசதிகள் அளிக்கப்பட்டு இந்தப் பகுதிகள் மேம்படுத்தப்படும். அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களை ஒன்று குவித்து இதற்கான வளங்கள் திரட்டப்படும். இதற்கும் அதிகமாகத் தேவைப்படும்போது தீவிர இடைவெளி நிதி (CGP) இந்தத் திட்டத்திற்குத் தரப்படும்.
திட்டத்தின் பார்வை
தேசிய ஊரக நகர்ப்புறத் திட்டம் (NRUM) ஊரக சமூக வாழ்வின் சாரத்தைப் பாதுகாத்துப் போற்றும். இத்தகைய ஊரகக் கூட்டுப் பகுதிகளின் மேம்பாட்டை உருவாக்கும் சமநிலை, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு நிலை ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தி, நகர்ப்புறத்திற்குத் தேவைப்படும் வசதிகள் என்று கருதப்படும் வசதிகளோடு சமரசம் செய்து கொள்ளாமல், ஊரக நகர்ப்புறக் கூட்டுப் பகுதிகளை இந்தத் திட்டம் உருவாக்கும்.
திட்டத்தின் நோக்கம்
உள்ளூர் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், அடிப்படை சேவைகளை மேம்படுத்துதல், திட்டமிடப்பட்ட ஊரக நகர்ப்புறக் கூட்டுப்பகுதிகளை உருவாக்குதல் ஆகியன இந்தத் திட்டத்தின் நோக்கங்கள்.
வெளிப்பாடுகள்
ஊரகப் பகுதிக்கும், நகர்ப்புறத்திற்கும் உள்ள இடைவெளியை நிரப்புதல், அதாவது, பொருளாதார, தொழில்நுட்ப இடைவெளிகள், வசதிகளிலும் சேவைகளிலுள்ள இடைவெளிகள் ஆகியவற்றை நிரப்புதல்.வறுமையைக் குறைப்பது, ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பின்மையைக் குறைப்பது போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து உள்ளூர் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவது.ஊரக நகர்ப்புறப் பகுதிகளில் வளர்ச்சியைப் பரவலாக்குவது.ஊரகப் பகுதிகளில் முதலீடுகளை ஈர்ப்பது.
ஊரக நகர்ப்புறக் கூட்டுப் பகுதிகள் புவியியல் ரீதியாகத் தொடர்ச்சியாக அமைந்திருக்கும் கிராமங்கள் ஊரக நகர்ப்புறக் கூட்டுப் பகுதிகளாக இருக்கும். சமவெளிப் பகுதிகளில் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையில் மக்கள்தொகையும், பாலைநிலம், குன்றுகள், பழங்குடிப் பகுதிகளில் 5000 முதல் 15000 வரையிலும் மக்கள் தொகையும் கொண்டுள்ள பகுதிகள் இதில் அடங்கும். நடைமுறை சாத்தியப்பாடுகளுக்கு ஏற்ப கூட்டுப் பகுதிகளை ஒன்று சேர்த்து நிர்வாக அலகுகளான கிராமப் பஞ்சாயத்துகளை ஒற்றை வட்டாரமாக / தாசில் ஆக இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை
NRUM திட்டத்தின் கீழ் இரண்டு வகையான ஊரக நகர்ப்புறக் கூட்டுப் பகுதிகள் இருக்கும். ஒன்று பழங்குடி இனத்தவர் பகுதி, மற்றது பழங்குடியினர் அல்லாத பகுதி. இந்த வகைகள் ஒவ்வொன்றிற்கும் தேர்வு வழிமுறைகள் மாறுபடும். ஊரக நகர்ப்புறக் கூட்டுப் பகுதி ஒன்றைத் தெரிவு செய்யும் போது, அந்தப் பகுதியில் பொருளாதார மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய வளங்கள் அனைத்தையும் கொண்ட வளர்ச்சி மையங்களாக அந்தப் பகுதிகள் இருக்கின்றனவா? என்பதை அரசாங்கம் பார்க்க வேண்டும். இத்தகைய வளர்ச்சி மையங்கள் வட்டாரத் தலைமையிட கிராமமாகவோ அல்லது அளவான மக்கள் தொகையுள்ள நகரங்களாகவோ கூட இருக்கலாம். புவியியல் தொடர்ச்சியைக் கணக்கில் கொண்டு, அடையாளம் காணப்பட்ட வளர்ச்சி மையத்தைச் சுற்றி 5 முதல் 10 கி.மீ. வட்டாரத்தில் இருக்கக் கூடிய தொடர்ச்சியான கிராமங்கள் / கிராமப் பஞ்சாயத்துக்கள் கொண்டதாக ஊரக நகர்ப்பகுதி அமைக்கப்படலாம். மக்கள் தொகை அடர்த்தி, அந்தப் பகுதியின் நிலவமைப்பு ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில் இந்த வட்டாரத்தின் அளவு இருக்க வேண்டும்.
பழங்குடி அல்லாத ஊரக நகர்ப்புறக் கூட்டுப் பகுதி
இவற்றைத் தெரிவு செய்வதற்கு அமைச்சகம், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முன்னணி துணை மாவட்டங்களின் பட்டியலைத் தரும். கூட்டுப் பகுதிகளை இவற்றிலிருந்து அடையாளம் காணலாம். இத்தகைய துணை மாவட்டங்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பின்வரும் அடிப்படைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன :ஊரக மக்கள் தொகையில் காணப்படும் பத்தாண்டு வளர்ச்சி.வேளாண்மை அல்லாத பிற துறைகளில் பணிபுரிவோரின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள பத்தாண்டு வளர்ச்சி.
பொருளாதார கூட்டுப் பகுதிகளின் இருப்பு நிலை.சுற்றுலா, ஆன்மிக முக்கியத்துவமுள்ள இடங்களைக் கொண்டிருப்பது.போக்குவரத்து வசதிகள் அருகிலிருப்பது.இத்தகைய அளபுருக்களை ஒவ்வொன்றிற்கும் பொருத்தமான மதிப்பீடு வழங்கப்படுகிறது. அமைச்சகம் அடையாளம் காட்டியிருக்கும் துணை மாவட்டங்களில் இருந்து மாநில அரசுகள் ஊரக நகர்ப்புற கூட்டுப் பகுதிகளை அடையாளம் கண்டு தெரிவு செய்து கொள்ளலாம் அப்படிச் செய்யும் போது பின்வரும் அளபுருக்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
ஊரக மக்கள்தொகையில் பத்தாண்டு வளர்ச்சி
நிலமதிப்பு உயர்வு வேளாண்மை அல்லாத பிற தொழில்களில் ஈடுபட்டிருப்போரின் பத்தாண்டுக் கால வளர்ச்சிப் பங்களிப்பு மேல்நிலைப்பள்ளிகளில் பெண்குழந்தைகளின் சேர்க்கை சதவீதம் பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜ்னா திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் குடும்பங்களின் சதவீதம். தூய்மை இந்தியா திட்டத்தில் கண்டுள்ள முன்னேற்றம். கிராமப் பஞ்சாயத்துகளில் சிறந்த அரசாட்சி முன்முயற்சிகள்.
இதைத் தவிர, தேவை எனக்கருதும் மற்றெந்த அளபுருக்களையும் மாநிலங்கள் சேர்த்துக் கொள்ளலாம். ஆயினும், முதல் நான்கு அளபுருக்களுக்கு 80% மதிப்பு தரப்படவேண்டும். கடைசி மூன்று அளபுருக்களில் 20% மிகாமல் மாநிலங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.