பிரசித்தி பெற்ற வங்கியான லட்சுமி விலாஸ் வங்கியில் சமீபத்தில் நிர்வாகத்தில் குழப்பம் ஏற்பட்டு உயர்மட்ட நிர்வாகிகள் பங்குதாரர்களால் ஓரங்கட்டப் பட்டனர்.இந்த சுவடின் ஈரம் காய்வதற்குள் இதேபோல் ஒரு சிக்கல் கேரளாவின் பிரசித்தி பெற்ற தனலட்சுமி வங்கியிலும் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த வங்கியின் தலைமை செயல் அதிகாரியைப் பங்குதாரர்களை ஓரங்கட்டி உள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த வங்கியைச் சார்ந்தோர் மற்றும் வாடிக்கையாளர்கள் வங்கியின் நிலை என்னவாகுமோ என்ற பீதியில் உள்ளனர்.
பெரிய நிறுவனங்களில் உயர் செயல் அதிகாரிகள் மற்றும் இயக்குநர்களை நியமிக்கும் போது, பங்குதாரர்கள் பெரும்பாலும் அவர்களை ஆதரித்தே வாக்களிப்பார்கள்.கடந்த சில நாட்களாக, நமது நாட்டில் குறிப்பாக வங்கிகளின் நிர்வாகத்தில் இந்த நிலை மாறிக் கொண்டு இருக்கிறது.தமிழகத்தின் சிறந்த தனியார் வங்கிகளில் ஒன்றாகத் திகழ்ந்த லட்சுமி விலாஸ் வங்கியில் ஏழு இயக்குநர்கள் நியமனத்துக்கு எதிராக, பங்குதாரர்கள் வாக்களித்தது நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட விஷயமானது.
இந்த சூடு தணிவதற்கு இதேபோன்ற ஒரு சிக்கல் கேரளாவில் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் தனலட்சுமி வங்கிக்கும் ஏற்பட்டுள்ளது.கேரளாவின் திருச்சூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த வங்கி 93 ஆண்டு பாரம்பரியம் மிக்கது.இந்த வங்கியில் தற்போது சுனில் குருபக்ஷானி (Sunil Gurubaxani) என்பவரை நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரியாக நியமிக்க, பங்குதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன் நடந்த வங்கியின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் 90 சதவீத பங்குதாரர்கள் அவருக்கு எதிராக வாக்களித்துள்ளனர் வாக்களித்துள்ளனர்.
இந்த வங்கியின் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட 10 தீர்மானங்களில், ஒரே ஒரு தீர்மானம் மட்டும் பங்குதாரர்களால் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. அது சுனில் குருபக்ஷானி முதன்மைச் செயல் அதிகாரி & நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுவது குறித்த தீர்மானமாகும்.கோபிநாத், சி கே. ஜி. சுப்பிரமணிய ஐயர், கேப்டன் சுசீலா மேனன், ஜி. ராஜகோபாலன் நாயர், பி கே விஜய குமார் போன்றவர்கள் இயக்குநர்களாக நியமிக்கப்படுவதற்கான தீர்மானங்களை நிறைவேற்றப் பங்குதாரர்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர்.சுனில் குருபக்ஷானி முதன்மைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்படுவதற்குப் பங்குதாரர்கள் காரணமில்லாமல் எதிர்ப்பு தெரிவிக்க இல்லை.
சுனில் குருபக்ஷானி, கடந்த பிப்ரவரி மாதம்தான் இந்த வங்கியின் முதன்மைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். சுனில், ஒரு முன்னுரிமை பிரச்சினையை வெளியிட நிர்வாகிகளிடம் யோசனை சொல்லி இருக்கிறார். அப்படி ஒரு பிரச்சனையைக் கொண்டு வந்தால், தற்போது வங்கியில் பங்குதாரர்கள் தங்கள் வசம் வைத்திருக்கும் பங்குகள் குறைந்துவிடும். எனவேதான், பங்குதாரர்கள் சுனிலின் நியமனத்துக்கு எதிராக வாக்களித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் வட இந்தியாவில் 25 வங்கிக் கிளைகளை நிறுவவும் அவர் யோசனை தெரிவித்திருக்கிறார்.இதைப் பெரும்பாலான பங்குதாரர்கள் விரும்பவில்லை எனவே பங்குதாரர்கள், சுனிலுக்கு எதிராக வாக்களிக்க இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.அதே சமயம் தனலட்சுமி வங்கியின் நிதி நிலை லட்சுமி விலாஸ் வங்கியின் அளவுக்கு மோசமாக இல்லை என்பது தான் ஆறுதலான விஷயம்.
கடந்த ஜூன் மதத்திலிருந்து தொடர்ச்சியாக சஜீவ் கிருஷ்ணா, கே என் முரளி, ஜி வெங்கடநாராயணன் ஆகிய மூன்று இயக்குநர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.கடந்த அக்டோபர் 2019-ல் தனலட்சுமி வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் & முதன்மைச் செயல் அதிகாரி டி லதா, பொறுப்பேற்ற 15 மாதங்களிலேயே ராஜினாமா செய்தார். இந்தக் களேபரங்களுக்கு இடையில் சமீபத்தில், ரிசர்வ் வங்கி, டி கே கஸ்யப் என்பவரை, தனலட்சுமி வங்கியில் கூடுதல் இயக்குநராக நியமித்தது பலரையும் அதிர வைத்திருக்கிறது.