ஒரு தனி மனிதன் “நான் எல்லா வகையிலும் தோற்றுவிட்டேன் அல்லது உடல்/மன ரீதியான இம்சை காரணமாக தற்கொலை செய்கிறேன்” என்று செயலாற்றுவது இந்திய குடியரசு சட்டப்படி தண்டனைக்குறிய குற்றமாகும். ஆனால் இந்திய குடியரசு சிறப்பு சலுகையாக சிலருக்கு இந்த அரிதான சலுகையை தாராளமாக வழங்குகிறது..
நீங்கள் சட்டபடி தற்கொலை செய்துகொள்ளலாம்.. அதற்கு நீங்கள் தூத்துக்குடி எனும் ஊரில் வசிக்கவேண்டும்.. நான் சொல்வது மிகையானதாகவோ அல்லது அபத்தமாகவோ தோன்றலாம். தாமிரபரணி எனும் உயிர்போடு இருக்கும் நதியை சுரண்டி வருடம் முழுவதும் தண்னீர் பெறுகின்றன இங்குள்ள ஆலைகள்.
வாழை, வெற்றிலை, அவுரி, முப்போக நெல் சாகுபடி எத்தகைய விவசாயமும் இன்றி வறட்சியாக கிடக்கிறது நிலம். கார்பன், கந்தக துகள்களால் பறவைகள் கூட சுவாசிக்க தினறுகிறது. புற்றுநோய், சிறுநீரக கோளாறு, சுவாச நோய்களால் இங்குள்ள மக்கள் உடல்ரீதியாகவும், பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்..
உண்மையில் ஜனநாயகத்தின் அத்தனை தூண்களும் சரிந்து கிடக்கிறது..ங்கு..கட்டபொம்மன், சுந்தரலிங்கம், பாரதி, உ.வே.சா, வ.சு.சிதம்பரனார், கோசல்ராம், குரூஸ்பர்னாந்து பிறந்த வீர நிலத்தில்.. இன்று அனில் அகர்வால் எனும் கார்பரேட் முதலாளி அரசுகளின் ஒத்துழைப்போடு புற்றுநோயை பரப்புகிறான்..
ஒரு பள்ளி சிறுவனாக 1995களில் இதே நிறுவனத்திற்கு எதிராக மிகப்பெரிய மக்கள் எழுச்சியினை பார்த்திருக்கிறேன்.. அன்று சமூக வலைதளங்களோ, நவீன தொடர்பு சாதனங்களோ இல்லாத நாளில் பெருந்திரளாய் மக்கள் ஒருங்கினைந்தனர்.
அதே காலகட்டத்தில் இந்த நகரில் நிகழ்ந்த இந்து நாடார்-கிறிஸ்துவர், தேவேந்திரர்-நாடார், தேவேந்திரர்-தேவர் போன்ற ஜாதி, சமய மோதல்கள் இந்த ஆலைக்கு எதிரான ஒருங்கினைந்த மக்கள் போராட்டத்தை சிதறடித்தது.. இதில் மத்திய மாநில அரசுகள், கட்சிகள் மட்டுமின்றி சில அயல்நாட்டு நிதிபெறும் தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கும் பங்குன்டு..
அங்குள்ள போராடும் மக்களிடத்தில் வேதாந்தா கார்பரேட் நிறுவனம் யாரலும் எதிர்க்க முடியாதவர்கள், இலுமினாட்டிகள், எதிர்பவர்கள் அழிக்கபடுவார்கள், போராட்டங்களை ஒருங்கினைப்பவர்களே அந்த நிறுவனங்களின் ஒப்பந்ததாரர்கள், கை-கூலிகள் எனும் அவநம்பிக்கை தொடர்ந்து விதைக்கப்படுகிறது. இவர்கள் மீத்தேன், நீயூட்ரினோ, சாகர்மாலா திட்டங்களிலும் இதையே பரப்புபவர்கள்.
அன்று அரசியல் வியாபாரிகளும், ஜாதிய தலைவர்களும் போட்டி போட்டு பணப்பெட்டி வாங்கினார்கள். ஆனால் இத்தகைய நிலை இன்று இல்லை. இளைய தலைமுறை விழித்துள்ளது. ஹைட்ரோ கார்பன், கெயில், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் போன்ற எந்த திட்டத்தையும் தமிழக நிலம் அனுமதிக்காது.
கட்டுரையாளர் : ஸ்டாலின் செந்தில் முருகன்