ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்குத் தமிழக அரசு பட்டா வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், பல்வேறு சலுகைகள் தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்படுகின்றன.
பட்டா வழங்குவது குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் மாவட்ட ஆட்சியர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் பல ஆண்டுகளாகப் புறம்போக்கு நிலங்களில் வசிப்போர்கள் அங்கிருந்து வெளியேற்றும் நடைமுறை இருந்து வந்த நிலையில், தற்போது ஆட்சேபனை இல்லாத மற்றும் ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலங்கள் என வரைமுறை செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து வருவாய்த்துறை கள அலுவலர்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு, ஆட்சேபனை உள்ள புறம்போக்கு மற்றும் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்கள் தொடர்பான பட்டியல் தயார் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதில் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்கள் அனைத்தும் வரன்முறை செய்யப்படுகிறது. இந்த நிலங்களுக்குப் பட்டா வழங்கும் நடைமுறைகளை நவம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனப் பட்டா மேளாவையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்துள்ளார்.