இப்படியும் ஒரு பிசினஸ் இறந்தவர்களின் உடைகளை வாங்கி பேய் வேடமிட்டு விற்பனை செய்யும் பெண்.

by Nishanth, Oct 29, 2020, 13:30 PM IST

இறந்தவர்கள் பயன்படுத்திய உடைகளை மலிவு விலை கொடுத்து வாங்கி அதை விற்பனை செய்து வருகிறார் ஒரு பெண். அதுவும் பேய் வேடமிட்டு விற்பனை நடத்தி வருகிறார்.தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தான் இந்த பயங்கர வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

வியாபாரத்தில் ஏதாவது புதுமையாக செய்தால் மட்டுமே இப்போது பிழைக்க முடியும் என்ற நிலை இருக்கிறது. இப்படித் தான் வித்தியாசமாக ஏதாவது செய்து பார்க்க வேண்டும் என்ற முயற்சியில் ஒரு பெண்ணுக்கு இதுவரை யாருமே யோசிக்காத ஒரு திட்டம் உதித்தது. தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த கனிதா தோங்நாக் என்ற இளம் பெண்ணுக்குத் தான் இந்த பயங்கரமான ஐடியா வந்தது. இவர் இறந்தவர்கள் பயன்படுத்திய உடைகளை வாங்கி அதை விற்பனை செய்ய தீர்மானித்தார். சும்மா விற்பனை செய்தால் யாரும் வாங்க மாட்டார்கள் எனக் கருதி வித்தியாசமாக முயற்சித்து பார்க்கத் தீர்மானித்தார். இதன்படி பேய் போல வேடமணிந்து அந்த ஆடைகளை விற்க முடிவு செய்தார். அந்த பயங்கர திட்டம் தனக்கு வெற்றியைத் தந்திருப்பதாக கனிதா கூறுகிறார்.

இந்த ஐடியா எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அவரே கூறுவதை கேட்போம்... ஏதாவது பிசினஸ் செய்ய வேண்டும் என்று நான் நீண்ட காலமாக நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் எனது வீட்டுக்கு அருகே தெரிந்த ஒருவர் திடீரென மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்குக்கு நான் சென்றிருந்தேன். அப்போது அவர் கடைசியாக அணிந்திருந்த உடைகளை உடலை எரிக்கும் போது சேர்த்து எரிப்பதை நான் பார்த்தேன். அந்த சமயத்தில் தான் எனக்கு ஒரு யோசனை வந்தது. இறந்தவர்கள் பயன்படுத்திய உடைகளை வாங்கி விற்பனை செய்யலாம் என தீர்மானித்தேன். யாராவது மரணமடைந்தால் அங்கு சென்று அந்த நபர் பயன்படுத்திய உடைகளை வாங்கி விற்பனை செய்ய முடிவு செய்தேன்.

மேலும் சும்மா அந்த உடைகளை விற்பனை செய்தால் யாரும் வாங்க மாட்டார்கள் என கருதி வித்தியாசமாக யோசித்து, பேய் போல மேக்கப் போட்டு விற்பனை செய்ய தீர்மானித்தேன். தினமும் 3 மணி நேரம் மேக்கப் போடுவதற்காக மட்டுமே செலவாகிறது. ஆன்லைன் மூலம் தான் நான் விற்பனை செய்து வருகிறேன். தற்போது வியாபாரம் சூடுபிடித்துள்ளது. சிலர் உடைகளை வாங்காவிட்டாலும் என்மீது பரிதாபப்பட்டு எனக்கு நன்கொடை அனுப்பி வருகின்றனர் என்று கூறினார்.

You'r reading இப்படியும் ஒரு பிசினஸ் இறந்தவர்களின் உடைகளை வாங்கி பேய் வேடமிட்டு விற்பனை செய்யும் பெண். Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை