டவுசர் போடும் பசங்களுக்கு தடை பஞ்சாயத்தின் ஒரு வேடிக்கையான உத்தரவு.

by Nishanth, Nov 2, 2020, 19:23 PM IST

வாலிபர்கள் டவுசர் அணிந்து பொது இடங்களில் சுற்றக் கூடாது என்று உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஒரு பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன் இளம்பெண்களுக்கு ஜீன்ஸ் போடவும், செல்போன் உபயோகிக்கவும் தடை விதித்த அதே காப் பஞ்சாயத்து தான் இப்போது இந்த ஒரு வேடிக்கையான நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள முசாபர்நகர் மாவட்டத்தில் காப் என்ற பஞ்சாயத்து உள்ளது. இந்த பஞ்சாயத்தில் கடந்த 2014ம் ஆண்டு ஒரு சர்ச்சையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இளம் பெண்கள் பொது இடங்களில் ஜீன்ஸ் மற்றும் குட்டையான ஆடைகளை அணியவும், செல்போன் பயன்படுத்தவும் தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பிய போதிலும் அந்த உத்தரவு வாபஸ் பெறப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்து காப் பஞ்சாயத்து அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி வாலிபர்கள் பர்முடா போன்ற டவுசர் அணிந்து மார்க்கெட் உட்பட பொது இடங்களுக்கு செல்ல கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து காப் பஞ்சாயத்து தலைவர் நரேஷ் டிகெய்ட் கூறியது: கடந்த சில வருடங்களுக்கு முன் இளம்பெண்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானித்தோம். இதன்படி இளம்பெண்களுக்கு ஜீன்ஸ் அணிந்து செல்லவும், செல்போன் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவு வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது. எங்களுக்கு மட்டும் தான் இதுபோன்ற கட்டுப்பாடுகளா? ஆண்களுக்கு கிடையாதா என்று பல பெண்கள் என்னிடம் கேட்டனர். இதனால் ஆண்களுக்கும் சில கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானித்துள்ளோம். இதன்படி ஆண்கள் பொது இடங்களில் முட்டுக்கு மேல் தெரியும்படியான டவுசர்களை அணியக் கூடாது. இது ஒரு உத்தரவு அல்ல, அறிவுரை மட்டும் தான்.

பெண்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிப்பதால் பிரச்சினை தீர்ந்து விடாது. இதனால் தான் ஆண்களுக்கும் சில கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானித்தோம் என்று கூறினார்.
காப் பஞ்சாயத்தின் இந்த நடவடிக்கையும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக இணையதளங்களில் இந்த நடவடிக்கைக்கு எதிராக எதிர்ப்பு வலுத்துள்ளது. உலகம் முழுவதும் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கும் போது இந்தியாவில் தான் இதுபோன்ற பிற்போக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். டவுசர் அணியக் கூடாது என்பது ஒரு அறிவுரை மட்டும் தான் என்று கூறியபோதிலும், டவுசர் அணிந்து வருபவர்களின் பெயர், விபரங்களை பஞ்சாயத்து அதிகாரிகள் பதிவு செய்து வருவதாக கூறப்படுகிறது.

You'r reading டவுசர் போடும் பசங்களுக்கு தடை பஞ்சாயத்தின் ஒரு வேடிக்கையான உத்தரவு. Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை