மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லோனார் ஏரி சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ராம்சார் பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1971 ம் ஆண்டு ஈரான் நாட்டில் உள்ள ராம்சார் பகுதியில் உலகின் முதல் சதுப்பு நில பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த "ராம்சார் மாநாடு" என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு பல்வேறு நாடுகளில் உள்ள உலக முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நில பகுதிகளை ராம்சார் பகுதி என்று அறிவிக்கும். ராம்சார் பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடங்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் சர்வதேச நிதி உதவி வழங்கப்படும்.
இந்தவகையில் இந்தியாவில் இது வரை 40 சதுப்பு நில பகுதிகள் ராம்சார் பகுதிகள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 41 வது பகுதியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லோனார் ஏரியும், ராம்சார் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஏரி விண்கல் விழுந்ததால் உருவானதாக கூறப்படுகிறது. இந்த ஏரி மும்பையில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் புல்தானா மாவட்டத்தில் உள்ளது. 365.16 ஹெக்டேர் நிலப்பரப்பு கொண்ட லோனார் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள இந்த ஏரி 77.69 ஹெக்டேர் நிலப்பரப்பை கொண்டது.